Published : 28 Jun 2023 07:27 AM
Last Updated : 28 Jun 2023 07:27 AM

அஜய் கிருஷ்ணா, முருகன் அஸ்வின் பந்துவீச்சில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிக்கு 2-வது வெற்றி

மதுரை அணி வீரர்கள்

சேலம்: டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது வெற்றியைப் பதிவு செய்தது சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சீகம் மதுரை பேந்தர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி 14.1 ஓவரில் 79 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து கடும் சரிவை சந்தித்திருந்தது. ஆதித்யா 6, கேப்டன் ஹரி நிஷாந்த் 2, ஜெகதீசன் கவுசிக் 4, சுரேஷ் லோகேஷ்வர் 6, ஸ்வப்னில் சிங் 11, ஸ்ரீ அபிஷேக் 21, தீபன் லிங்கேஷ் 9 ரன்களில் வெளியேறினர்.

நெருக்கடியான சூழ்நிலையில் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய சரவணன் 17 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 22 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி கூட்டாக 35 பந்துகளில் 62 ரன்கள் விளாசியது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் பாபா அபராஜித், சிலம்பரசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

142 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தொடக்க வீரர்களான சந்தோஷ் சிவ், கேப்டன் நாராயண் ஜெகதீசன் ஆகியோர் சிறப்பாக தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு 59 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடியை முருகன் அஸ்வின் பிரித்தார். அவரது பந்து வீச்சில், சந்தோஷ் சிவ் 28 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.

தொடர்ந்து நாராயண் ஜெகதீசன் 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த நிலையில் முருகன் அஸ்வினின் பந்தில் போல்டானார். இதன் பின்னர் சீரான இடைவெளியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் விக்கெட்களை பறிகொடுத்தது.

சஞ்சய் யாதவ் 9, பிரதோஷ் ரஞ்சன்பால் 3, சசிதேவ் 6 ரன்களில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவையாக இருந்தன. 19-வது ஓவரை வீசிய அஜய் கிருஷ்ணா, சேப்பாக் சூப்பர் கில்லீஸின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹரீஷ் குமார் (3), மதன் குமார்(0), ராமலிங்கம் ரோஹித் (0) ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தியதுடன் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது.

குர்ஜப்நீத் சிங் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்திலேயே பாபா அபராஜித் ஆட்டமிழந்தார். 29 பந்துகளை சந்தித்த அவர், 33 ரன்கள் சேர்த்தார். இதன் பின்னர் எஞ்சிய 5 பந்துகளிலும் குர்ஜப்நீத் சிங் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 9 விக்கெட்கள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி தொடரில் 2-வது வெற்றியை பதிவு செய்தது. போட்டி முடிவடைந்த பின்னர்சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி மகேஷ் சுப்ரநேயன் கூறியதாவது:

இந்த ஆட்டம் எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. பேட்டிங்கில் தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்தோம். 79 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தோம். குறைந்த அளவிலான ஸ்கோரை எடுப்போம் என கருதினோம். ஆனால் வாஷிங்டன் சுந்தர், சரவணன் ஆகியோர் அற்புதமாக விளையாடி 141 ரன்கள் வரை எடுக்க உதவினர்.

துரத்தலின் போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. சந்தோஷ் ஷிவ், ஜெகதீசன் ஜோடி 9 ஓவர்களில் 59 ரன்கள் சேர்த்தது. இவர்கள் இருவரையும் முருகன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்து திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆட்டத்தை மெதுவாக கொண்டு சென்று வெற்றி பெறலாம் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கருதியது. இதனால் கடைசி கட்டத்தில் ஆட்டத்தை விரைவுப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்கள் செய்த தவறு, பாபாஅபராஜித்திற்கு அதிக ஸ்டிரைக் கொடுக்காததுதான். அதேவேளையில் 19-வது ஓவரை விசிய அஜய் கிருஷ்ணா அற்புதமாக வீசி 3 விக்கெட்களை வீழ்த்தியதுடன் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரில் குர்ஜப்நீத் சிங்கும் அசத்தியதால் வெற்றி வசப்பட்டது. இன்னும் எங்களுக்கு 3 ஆட்டங்கள் உள்ளன. இதில் இரண்டில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு நாங்கள் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x