ODI WC Qualifier | சூப்பர் ஓவரில் மே.இ.தீவுகளை வீழ்த்திய நெதர்லாந்து!

வான் பீக்
வான் பீக்
Updated on
2 min read

ஹராரே: நடப்பு ஐசிசி உலகக் கோப்பை தகுதி சுற்றின் லீக் போட்டியில் முன்னாள் உலக சாம்பியன் அணியான மேற்கிந்திய தீவுகள் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது நெதர்லாந்து கிரிக்கெட் அணி. அந்த அணியின் ஆல் ரவுண்டர் வான் பீக், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார்.

வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்க உள்ள 8 அணிகள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 2 அணிகள் உலகக் கோப்பை தகுதிச் சுற்று மூலம் உறுதி செய்யப்பட உள்ளன. அந்த 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று ஜிம்பாப்வே நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகள் உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெறும்.

இந்த தகுதி சுற்றில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மேற்கிந்திய தீவுகள் மற்றும் நெதர்லாந்து அணிகள் லீக் போட்டியில் விளையாடின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது மேற்கிந்திய தீவுகள் அணி. நிக்கோலஸ் பூரண், 65 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கிங் மற்றும் சார்லஸ், அரை சதம் பதிவு செய்தனர். கேப்டனா ஷாய் ஹோப், ப்ரூக்ஸ், கீமோ பால் ஆகியோரும் நேர்த்தியாக ரன் குவித்தனர்.

இமாலய இலக்கு: 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கை நெதர்லாந்து அணி விரட்டியது. தேஜா நிடமானுரு மற்றும் ஸ்காட் எட்வர்ட்ஸ் இணைந்து 5-வது விக்கெட்டிற்கு 143 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்காட் எட்வர்ட்ஸ், 67 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தேஜாவும், சதம் பதிவு செய்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வான் பீக், 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டன. அல்சாரி ஜோசப் வீசிய அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டை இழந்து 8 ரன்களை எடுத்தது. இரு அணியின் ரன்களும் 374 என சமன் ஆன காரணத்தால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

சூப்பர் ஓவர்: நெதர்லாந்து அணிக்காக சூப்பர் ஓவரில் வான் பீக் மற்றும் எட்வார்ட்ஸ் களம் கண்டனர். ஸ்ட்ரைக்கில் இருந்த வான் பீக், ஹோல்டர் வீசிய அந்த ஓவரில் 30 ரன்கள் எடுத்தார். முறையே 4, 6, 4, 6, 6, 4 என பந்தை பவுண்டரிக்கு அவர் விரட்டினார். தொடர்ந்து சூப்பர் ஓவரில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 5 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் மூலம் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. அந்த ஓவரை வீசியதும் வான் பீக் தான்.

கிரிக்கெட் விளையாட்டின் ரசிகர்கள் மனதில் இந்த போட்டி மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. சமூக வலைதளம் முழுவதும் இந்த போட்டி குறித்த பேச்சு வைரலானது. வான் பீக், நெதர்லாந்து அணியின் சூப்பர் மேனாக ஜொலித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in