

ஹராரே: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தகுதி சுற்றில் அமெரிக்க அணியை 304 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்தது ஜிம்பாப்வே அணி. கிரிக்கெட் வரலாற்றில் இது 2-வது பெரிய வெற்றியாக அமைந்தது.
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தகுதி சுற்று ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ஜிம்பாப்வே - அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 408 ரன்கள் குவித்தது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அந்த அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாக இது அமைந்தது. இதற்கு முன்னர் அந்த அணி கடந்த 2009ம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக 7 விக்கெட்கள் இழப்புக்கு 351 ரன்கள் குவித்திருந்தது.
அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சீன் வில்லியம்ஸ் 101 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகளுடன் 174 ரன்கள் விளாசினார். ஜாய்லார்டு கும்பி 103 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 78 ரன்களும், சிகந்தர் ராசா 27 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்களும், ரியான் பர்ல் 16 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் சேர்த்தனர்.
409 ரன்கள் இலக்குடன் பேட் செய்த அமெரிக்க அணி 25.1 ஓவரில் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 11 ஓவர்களில் 45 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்த அந்த அணி அதன் பின்னர் மீளவில்லை. அதிகபட்சமாக அபிஷேக் பிரத்கர் 24, ஜெஸி சிங் 21, கஜானந்த் சிங் 13 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்டு நகரவா, சிகந்தர் ராசா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணிக்கு இந்தத் தொடரில் 4-வது வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகப் பெரிய அளவிலான 2-வது வெற்றியை பதிவு செய்த அணி என்ற சாதனையையும் ஜிம்பாப்வே படைத்துள்ளது. இந்த வகை சாதனையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.