Published : 01 Jul 2014 04:47 PM
Last Updated : 01 Jul 2014 04:47 PM

யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியத் தேவையில்லை: விராட் கோலி

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்விலும் ஒரு தருணம் வரும் அப்போது யாருக்கும் ஒருவர் தன்னை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை என்ற நிலை ஏற்படும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நேற்று பிசிசிஐ.டிவி-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

"தொடக்கத்தில் ஒருவரது கிரிக்கெட் வாழ்வில் விமர்சகர்களுக்கு நிரூபிக்க வேண்டியத் தேவை இருக்கிறது. ஆனால் இப்போது அதுபோன்றத் தேவை இருப்பதாக நான் கருதவில்லை. நான் ஏதோ சாதித்து விட்டேன் என்பதாக இதனைக் கூறவில்லை. ஆனால் அடுத்தவர்களுக்கு நிரூபிக்க வேண்டியத் தேவையில்லை என்பதை இப்போது நான் உணர்ந்து விட்டேன்.

எனது ஆட்டம் பற்றி நான் என்ன நினைக்கிறேன், என்னிடமிருந்து நான் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதே இப்போது முக்கியமாகப் படுகிறது.

இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது ஒரு பெரிய விஷயம், இப்படியிருக்கையில் இங்கு நான் பெரிய அளவுக்கு ரன்களைக் குவிக்க வேண்டும், எனக்கு இது ஒரு பெரிய சவால் என்று எனக்கு பிறர் கூற வேண்டிய அவசியமில்லை. எனக்கே இந்தத் தொடரின் முக்கியத்துவம் நன்றாகத் தெரியும். இங்கு மட்டுமல்ல எங்கும் நான் ரன்கள் குவிக்கவே விரும்புகிறேன் காரணம் நான் சிறந்த பேட்ஸ்மெனாக இருக்க வேண்டும் என்று விரும்புபவன்.

நம் நாட்டில் கிரிக்கெட் விமர்சகர்கள் விசித்திரமாகச் செயல்படுகின்றனர். எங்கெல்லாமோ ரன்களை அடிப்போம், ஆனால் ஒரு தொடரில் சரியாக ஆடவில்லையெனில் நமது திறமை மீது அவர்களுக்கு உடனடியாகச் சந்தேகம் வந்து விடுகிறது. இதைத்தான் மூத்த வீரர்கள் அவர்கள் கிரிக்கெட் வாழ்வின் முடிவில் இருக்கும்போதும் விமர்சகர்கள் செய்தனர்.

ஒருவர் நன்றாக விளையாட வேண்டுமென்றால் அவரது தோல்விகளிலும் அவரை ஊக்குவித்து அவரிடமிருந்து சிறந்தவற்றை வெளியே கொண்டு வரவேண்டும், ஆனால் சில சூழ்நிலைகளில் இவர் சரியாக ஆடமாட்டார், என்று அவரை விமர்சனம் செய்து மனத்தொய்வை ஏற்படுத்தி விடுகின்றனர். உடனே எங்களை பேட்டிங் சாதக பிட்ச்களுக்கான வீரர்கள் என்று முடிவு கட்டி விடுகின்றனர். நான் இவர்களின் மீதான் கவனத்தைத் துறந்து நீண்ட காலம் ஆகிவிட்டது.

நான் ஆட்டமிழந்தால் அதைப்பற்றி சிந்திப்பவன் நானாகவே இருக்கிறேன்.

தோனி சில தருணங்களில் சில முடிவுகளை ஏன் எடுக்கிறார் என்பதை அவருடைய பார்வையிலிருந்து பார்க்க முயற்சி செய்து வருகிறேன், அவரது முடிவுக்குப் பின்னால் இருக்கும் தர்க்கத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளேன்.

ஃபீல்டிங்கில் பந்து என்னிடம் வரும் வரை நான் காத்திருப்பதில்லை, மாறாக பந்தை எடுத்து உடனடியாக த்ரோ செய்வதே என் வேலை.

உதாரணமாக, நான் லாங் ஆன் திசையில் நின்று கொண்டிருக்கிறேன், லெக் ஸ்பின்னர் வீசுகிறார், லாங் ஆஃப் ஃபீல்டர் சற்றே நேராக நிற்கிறார் என்றால் அவர் ஏன் இன்னும் தள்ளி நிற்கலாமே என்று யோசிப்பேன், ஏன் பாயிண்டில் ஃபீல்டர் நிறுத்தப்பட்டுள்ளார்? ஏன் ஸ்லிப் இல்லை? என்று யோசிப்பேன்.

இந்த விவகாரங்களில் கேப்டன் என்ன யோசிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்வது அவசியம். இவ்வாறு புரிந்து கொண்டால் எதிரணி கேப்டன் நமக்கு எதிராக என்ன திட்டம் தீட்டுவார் என்பதையும் நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

எனது டெஸ்ட் பேட்டிங்கைப் பொறுத்த வரை நான் நிறைய திட்டமிடுவேன். ஆனால் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் மனம் என்ன கூறுகிறதோ அதைச் செய்வேன், சூழ்நிலைக்குத் தக்கவாறு ஆட்டத்தை மாற்றுவேன். ஆகவே குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் பெரிதாக திட்டமிட எதுவும் இல்லை.

இவ்வாறு கூறியுள்ளார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x