

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டில் ரெய்னா என தனது பெயரிலேயே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா புதிய ஓட்டலைத் திறந்துள்ளார். இதுதொடர்பான தகவலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 2005-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி மொத்தம் 7,988 ரன்களைக் குவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக 176 போட்டிகளில் விளையாடி 4,687 ரன்கள் குவித்துள்ளார். சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அண்மையில் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் ரெய்னா தனது பெயரிலேயே ஓட்டலைத் திறந்துள்ளார். இதை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது புதிய முயற்சிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ரெய்னா கூறியுள்ளதாவது: ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள இந்திய உணவகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. நிச்சயம் இங்கு ருசியான உணவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. சுவை மிகுந்த இந்திய உணவுகளை இங்கு அறிமுகம் செய்யப் போகிறோம். இவ்வாறு ரெய்னா தெரிவித்துள்ளார்.