

சேலம்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ (NCG) என்ற பெயரில் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பங்கேற்று, மைதானத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் தெரிவித்தது..
“நான் இங்கு வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நடராஜன் சுவாரஸ்யமான மனிதர். அவரது பயணம் பலருக்கும் உத்வேகம் கொடுக்கும். பல வருடத்திற்கு முன்பு அவர் தமிழ்நாட்டுக்காக விளையாடிய போதுதான் நான் பார்த்தேன். தமிழ்நாடு, ஐபிஎல், இந்தியா வரை முன்னேறி காயத்தில் சிக்கி, அதிலிருந்து மீண்டு வந்தவர் அவர்.
விளையாட்டு வீரர்களின் ஆரம்ப நிலை பயணங்களில் பலரும் உதவி செய்வார்கள். ஆனால், ஒரு நிலைக்கு வந்ததும் மறக்க நேரும். ஆனால், நடராஜன் அப்படி இல்லை. அவருக்கு உதவிய அனைவரையும் தன் நினைவில் வைத்துக் கொண்டுள்ளார். தான் சார்ந்துள்ள கிரிக்கெட்டுக்கு ஒரு மைதானம் கட்டியுள்ளது பெரிய விஷயம். அதன் மூலம் தனது சமுதாயத்தை (Society) முன்னேற செய்கிறார்.
சின்ன ஊர்களில் இருந்து வந்து பெரிய விஷயம் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் தோனி தான். அது போல சேலம் சின்னப்பம்பட்டியில் இருந்து உலக கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை அவர் ஏற்படுத்தி உள்ளார். அண்மையில் முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மேத்யூ ஹேடன், ரிக்கி பாண்டிங் போன்றவர்கள் நடராஜன் ஏன் ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணிக்காக ஆடவில்லை என கேள்வி எழுப்பினர். அந்த அளவுக்கு அவர் ஆஸ்திரேலியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.
நானும் கிரிக்கெட் ஆடியுள்ளேன். எனக்கு வராத எண்ணம் நடராஜனுக்கு வந்துள்ளது. அந்த வகையில் அவரை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். இதற்காக அவர் அதிகம் மெனக்கெட்டுள்ளார். நடராஜன் போல ஊர் பக்கங்களில் இருந்து நிறைய பேர் வர வேண்டும். தமிழ்நாடு, ஐபிஎல் மட்டுமல்லாது இந்தியாவுக்காகவும் ஆடலாம்” என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.