

பெர்லின்: சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டில் இந்தியாவின் பதக்க வேட்டை 50-ஐ தாண்டி உள்ளது.
ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா 55 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 17 தங்கம், 27 வெள்ளி, 13 வெண்கலம் அடங்கும். தடகளம், சைக்கிள் பந்தயம், பளு தூக்குதல், ரோலர் ஸ்கேட்டிங், நீச்சல் ஆகிய பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேறுள்ளனர்.
நேற்று முன்தினம் நீச்சல் போட்டியில் மட்டும் இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை கைப்பற்றியது. அதேவேளையில் சைக்கிள் பந்தயத்தில் 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்லகம் என 6 பதக்கங்களை இந்தியா வென்றது. சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அனைவரும் பதக்கம் வென்றனர்.
5 கிலோ மீட்டர் சாலை பந்தயத்தில் நீல் யாதவ் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஒரு கிலோ மீட்டர் டைம் டிரையல் பிரிவில் நீல் யாதவ், ஷிவானி, இந்து பிரகாஷ் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர். அதேவேளையில் கல்பனா ஜெனா, ஜெயசீலா அற்புதராஜ் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
நீச்சல் போட்டியில் ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் திக் ஷா ஜிதேந்திரா ஷிர்கோன்கர், பூஜா கிரிதர்ராவ் கைகாவாடா, பிரஷாதி காம்ப்ளே ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர். 25 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் மாதவ் மதன் தங்கம் வென்றார்.
சித்தாந்த் முரளி குமார் 25 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் வெண்கலம் வென்றார். மினி ஈட்டி எறிதலில் ’பி’ பிரிவில் சாகேத் குந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.