

ஹராரே: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் நேபாளம் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி. கேப்டன் ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர்.
ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நேற்றுநடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது. கேப்டன் ஷாய் ஹோப் 129 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 132 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 94 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 115 ரன்களும் விளாசினர். பிரண்டன் கிங் 32, ரோவ்மன் பாவல் 29, ஜேசன் ஹோல்டர் 16 ரன்கள் சேர்த்தனர்.
நேபாளம் அணி தரப்பில் லலித் ராஜ்பன்ஷி 3 விக்கெட்கள் கைப்பற்றினார். 340 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நேபாளம் அணியானது 49.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக ஆரிப் ஷேக் 63, குல்சன் ஜா 42, ரோஹித் பவுடல் 30, கரண் 28 ரன்கள் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்களையும் அல்ஸாரி ஜோசப், கீமோ பால், அகேல் ஹோசின் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.