Published : 07 Jul 2014 02:53 PM
Last Updated : 07 Jul 2014 02:53 PM

பீட்டர்சனை கெட்ட வார்த்தையால் திட்டிய ஸ்ட்ராஸ் மன்னிப்பு கேட்டார்

லார்ட்ஸில் நடைபெற்ற எம்.சி.சி.-ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்ட் போட்டியின்போது வர்ணனையில் ஈடுபட்டிருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், கெவின் பீட்டர்சனை கெட்ட வார்த்தையால் திட்டியது அம்பலமானதை அடுத்து, அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த ஸ்ட்ராஸ், தான் பேசுவது மைக்கில் கேட்காது என்று நினைத்து கெவின் பீட்டர்சனை 'c...t' என்று கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார். அருகில் முன்னாள் இங்கிலாந்து துவக்க வீரர் நிக் நைட் இருந்துள்ளார்.

ஸ்ட்ராஸ், பீட்டர்சனைக் குறிவைத்துக் கூறிய இந்த கெட்ட வார்த்தை ஸ்கை ஸ்போர்ட்ஸ் பார்வையாளர்களுக்குக் கேட்கவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் பார்வையாளர்கள் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் கூறிய வார்த்தையைச் சரியாகக் கேட்டுள்ளனர். அதன் பிறகு ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனைக்குத் தொடர்ந்து ஸ்ட்ராஸின் இத்தகையச் செயலைக் கண்டித்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்துள்ளன.

இதனையடுத்து ஸ்ட்ராஸ், மன்னிப்புக் கேட்டுள்ளார். ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிர்வாகமும் ஸ்ட்ராஸ் சார்பாக மன்னிப்புக் கேட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின்போது கெவின் பீட்டர்சன், கேப்டன் ஸ்ட்ராஸ் பற்றி தென் ஆப்பிரிக்க அணியினரிடம் ஆப்பிரிக்க மொழியில் ‘முட்டாள்’ என்ற அர்த்தம் கொடுக்கும் வார்த்தையைப் பயனபடுத்தியதாக புகார் எழுந்தது. ஆனால் அதற்குப் பழிதீர்க்க ஸ்ட்ராஸ் மேலும் மோசமான ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியதே இப்போது சர்ச்சைக்குள்ளாகியது.

கிரிக்கெட் ஆட்டம் இனியும் ஜெண்டில்மேன் கேம் என்ற தகுதியைத் தக்க வைக்க முடியுமா என்று பலரும் ஸ்ட்ராஸின் வார்த்தைப் பிரயோகத்தை கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x