Published : 22 Jun 2023 07:36 AM
Last Updated : 22 Jun 2023 07:36 AM

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்: பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா

இந்திய அணி வீரர்கள்

பெங்களூரு: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேற்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் மோதின.இதில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 10-வது நிமிடத்தில் கோல் அடித்துஅசத்திய கேப்டன் சுனில் சேத்ரி 16, 72-வது நிமிடங்களில் பெனால்டி வாய்ப்புகளை கோலாக மாற்றினார். தொடர்ந்து 81-வது நிமிடத்தில் உதாந்த சிங் குமம் கோல் அடித்தார்.

இந்த ஆட்டத்தில் சுனில் சேத்ரி 3 கோல்கள் அடித்ததன் மூலம் ஆசிய கால்பந்து வீரர்களில் அதிககோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார். இந்த மைல் கல் சாதனையை சுனில் சேத்ரி தனது138-வது ஆட்டத்தில் நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன்னர் ஆசிய வீரர்களில் மலேசியாவின் மொக்தார் தஹாரி (1972 முதல் 1985 வரை) 89 கோல்கள் அடித்து 2-வது இடம் வகித்திருந்தார். தற்போது சுனில் சேத்ரி 90 கோல்களுடன் அவரை பின்னுக்குத் தள்ளி உள்ளார்.

உலக அரங்கில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடம் வகிக்கிறார். போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 123 கோல்களுடன் முதலிடத்திலும்,ஈரானின் அலி டேய் (1993 முதல் 2006 வரை) 109 கோல்களுடன் 2-வது இடத்திலும், அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்ஸி 103 கோல்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

‘ரெட்கார்டு’

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்கிற்கு ரெஃப்ரீ ரெட்கார்டு (சிவப்பு) வழங்கினார். முதல் பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பந்து ஆடுகளலைனுக்கு வெளியே வந்தது.அதை பாகிஸ்தான் அணியின்டிபன்டர் அப்துல்லா இக்பால், எடுத்து த்ரோ செய்ய முயன்றார்.அப்போது லைனுக்கு வெளியே இருந்த இந்திய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், அப்துல்லா இக்பாலின் கைகளில் இருந்த பந்தை தட்டிவிட்டார்.

இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் அணி வீரர்கள் இகோர் ஸ்டிமாக்குடன் கடும்வாக்குவாதம் செய்தனர். பாகிஸ்தான் பயிற்சியாளர் ஷாஜாத் அன்வரும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால் கடைசியாக பந்து எந்த வீரரின் கால்களுடன் தொடர்பில் இருந்தது என்பதை ரெஃப்ரீ சரிபார்க்க வேண்டும் என இகோர் ஸ்டிமாக் கோரிக்கை வைத்தார். நிலைமையை ஆய்வு செய்த ரெஃப்ரீ, இகோர் ஸ்டிமாக்கிற்கு ரெட் கார்டு வழங்கினார். இந்த நிகழ்வு ஆட்டத்தின் பரபரப்பை மேலும் அதிகரித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x