Published : 23 Oct 2017 09:28 PM
Last Updated : 23 Oct 2017 09:28 PM

2017-ல் 3-வது ஒயிட்வாஷ்: பாகிஸ்தானிடம் 5-0 தோல்வி; பெரும் சிக்கலில் இலங்கை அணி

ஷார்ஜாவில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வியடைந்து ஒருநாள் தொடரை 0-5 என்று இழந்து, இந்த ஆண்டில் 3-வது ஒயிட்வாஷ் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இம்முறை டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்த இலங்கை அணி இம்முறை 23 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் கான் ஷின்வாரி என்பவரிடம் 21 பந்துகளில் 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20/5 என்று தொடக்கத்திலேயே சரிவு கண்டு பிறகு 26.2 ஓவர்களில் 103 ரன்களுக்குச் சுருண்டது.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் 45 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருக்க, ஃபகார் ஜமான் 48 ரன்களை எடுத்து வாண்டர்சேயிடம் ஆட்டமிழக்க 20.2 ஓவர்களில் 105/1 என்று வெற்றி பெற்றது. தொடரை 5-0 என்று கைப்பற்றியது.

தொடர்ச்சியாக 12 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி உதை வாங்கியுள்ளது. இந்த வடிவத்தில் அந்த அணிக்கு திடீரென ஏற்பட்டுள்ள சரிவுக்கான காரணம் உண்மையில் புரிபடவில்லை, சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் பெரிய இலக்கை எதிர்த்து வெற்றி பெற்ற ஒரு அணி இப்படி தாழ்வு நிலைக்குச் செல்வது புரியாத புதிராக உள்ளது.

முதல் ஓவரில் 5வது பந்தில் சமரவிக்ரமா ரன் எடுக்காமல் அருமையான பந்தில் பவுல்டு ஆனார், மட்டைக்கும், கால்காப்புக்கும் இடையே பெரிய இடைவெளி.அடுத்த பந்தை இடது கை பவுலர்களுக்கேயுரிய முறையில் சந்திமல் ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே ஃபுல்லாக வீச முன் காலை குறுக்காக நகர்த்தாமல் ஆட முயற்சி செய்து சர்பராஸ் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் வாய்ப்பைப் பெற்றார் உஸ்மான் கான்.

தொடர்ந்தும் இவரை ஆட முடியாமல் இடது கை வீரரும் கேப்டனுமான உப்புல் தரங்கா இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார். மீண்டும் இதே ஓவரில் டிக்வெல்லாவை தனது அருமையான கோணத்தின் மூலம் கால்காப்பில் வாங்க வைத்து எல்.பி.ஆக்கினார். பிறகு சிறிவதனா கவர் பாயிண்டில் கேட்ச் கொடுத்து மோசமான ஷாட்டில் வெளியேற்றி தனது 3.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் உஸ்மான் கான்.

ஷார்ஜாவில் 100 ரன்களுக்கும் குறைவான ரன் எண்ணிக்கையில் இலங்கை அணி 4 முறை ஆல் அவுட் ஆகியுள்ளனர். இம்முறையும் இது நடந்திருக்கும் ஏனெனில் ஒரு நேரத்தில் 85/9 என்று இருந்தனர். ஆனால் 18 ரன் கூட்டணியினால் இந்த அவமானத்திலிருந்து தப்பியது. திரிமானே, ஹசன் அலி பந்தில் எட்ஜ் செய்தார். செகுகே பிரசன்னா மிக மோசமாக ரன் அவுட் ஆனார். திசர பெரேரா அதிகபட்சமாக 25 ரன்களை அடித்தார். ஹசன், ஷதாப் கான் இலங்கையின் டெய்ல் எண்டர்களை முடிக்க 103 ரன்களில் சுருண்டது இலங்கை.

பாகிஸ்தான் அணி எந்தவித சிரமுமின்றி 20.2 ஓவர்களில் வெற்றி பெற்றது. 5-0 என்று பாகிஸ்தான் ஒயிட்வாஷ் செய்தது இலங்கை அணியை. டி20 தொடரிலாவது இலங்கை அணி தனது நிலையை உயர்த்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். உஸ்மான் கான் ஆட்ட நாயகன், ஹசன் அலி தொடர் நாயகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x