

புதுடெல்லி: நிதி பற்றாக்குறையால் அர்ஜெண்டினா கால்பந்து அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை இந்திய கால்பந்து அணி இழந்துள்ளது தெரியவந்துள்ளது.
உலக சாம்பியனான அர்ஜெண்டினா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான நட்புரீதியிலான கால்பந்து போட்டி சீனாவில் உள்ள பெய்ஜிங் மைதானத்தில் நான்கு நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி தனது ட்ரேட் மார்க்கான இடது-கால் மூலம் பந்தை ஸ்ட்ரைக் செய்து கோலாக மாற்றி இருந்தார் மெஸ்ஸி. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதேபோல், இந்தோனேசியாவுடனும் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முன்னதாக, இந்திய கால்பந்து அணியுடன்தான் அர்ஜெண்டினா முதலில் விளையாட விரும்பியது என்பதை இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.
மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா அணி, தெற்கு ஆசியாவில் இரு அணிகளுடன் நட்புறவு ஆட்டமாக சர்வதேச போட்டிகளில் விளையாட முடிவு செய்து அவற்றில் ஒரு ஆட்டத்தை இந்திய அணியுடன் ஆட விருப்பம் தெரிவித்தது. முறைப்படி, இந்தியக் கால்பந்து அமைப்பின் கதவையும் அர்ஜெண்டினா தட்டியது.
ஆனால், இந்தியக் கால்பந்து அமைப்பு இந்த அரிய வாய்ப்பை நிராகரித்தது. நிராகரிப்புக்கான காரணங்கள் தற்போது வெளிவந்துள்ளன. அதன்படி, நிதி பற்றாக்குறையே அதற்கான காரணம் என்று இந்தியக் கால்பந்து அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
அனைத்து இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷஜி பிரபாகரன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள விளக்கத்தில், "அர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யவே மிகப்பெரிய தொகை வேண்டும். மேலும் அந்த அணிக்கான போட்டிக் கட்டணமும் ஏறக்குறைய 40 கோடி ரூபாய் அளவு இருக்கும். அந்த அளவு தொகை தற்போது அனைத்து இந்தியக் கால்பந்து கூட்டமைப்பிடம் இல்லை. அதை திரட்டுவதற்கான நிதி ஆதாரம் இல்லை என்பதாலேயே அர்ஜெண்டினாவுடன் விளையாடும் வாய்ப்பைத் தவிர்க்கும் சூழல் வந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
நடப்பு உலக சாம்பியன் மட்டுமல்ல, கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் அணிகளில் ஒன்று மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா. மூன்று உலகக் கோப்பை வெற்றிகள், 15 கோபா அமெரிக்கா, 2004, 2006 எனத் தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் போன்றவற்றை வென்று கால்பந்து உலகில் தனி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் லயோனல் மெஸ்ஸிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமும் இந்தியாவில் உள்ளது. இப்படியான அணியை எதிர்த்து விளையாடும் வாய்ப்பை இந்திய அணி நிதி பற்றாக்குறையால் இழந்துள்ளது.