

பர்மிங்காம்: பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டியில் 43 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி 48-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் கமிலா ஜியோர்ஜியை வீழ்த்தினார்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் மகளிருக்கான பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 48-வது இடத்தில் உள்ள இத்தாலியின் கமிலா ஜியோர்ஜி, 697-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை எதிர்த்து விளையாடினார். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த மோதலில் 43 வயதான வீனஸ் வில்லியம்ஸ் 7-6 (5), 4-6, 7-6 (6) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
தரவரிசையில் 50 இடங்களுக்குள் உள்ள வீராங்கனைக்கு எதிராக சுமார் 4 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் வெற்றி கண்டுள்ளார் வீனஸ்வில்லியம்ஸ். மகளிர் ஒற்றையர் பிரிவில் 7 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள வீனஸ் வில்லியம்ஸ் இந்த ஆண்டின்தொடக்கத்தில் ஆக்லாந்து போட்டியில் பங்கேற்ற போது தொடை பகுதியில் காயம்அடைந்தார். இதனால் 5 மாதங்களுக்கும் மேலாக சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார்.
காயத்தில் இருந்து குணமடைந்து கடந்த வாரம் நெதர்லாந்தில் நடைபெற்ற லிபிமா ஓபன் தொடரில் களமிறங்கினார். ஆனால் இந்தத் தொடரின் முதல் சுற்றில்சுவிட்சர்லாந்தின் 17 வயது வீராங்கனையான செலின் நாஃப்பிடம் தோல்வி அடைந்திருந்தார். 43 வயதிலும் வீனஸ் வில்லியம்ஸ் ஆக்ரோஷமாக விளையாடி வருவது வியக்க வைக்கும் வகையில் உள்ளது.