ODI WC 2023 | சுழலுக்கு சாதகமான சென்னையில் ஆப்கனுக்கு எதிராக விளையாட விரும்பாத பாகிஸ்தான்

பாகிஸ்தான் வீரர்கள் | கோப்புப்படம்
பாகிஸ்தான் வீரர்கள் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், சுழலுக்கு சாதகமான சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட பாகிஸ்தான் அணி விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. அதேபோல பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூரு மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் விளையாட பாகிஸ்தான் விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பை அட்டவணையை அறிவிப்பதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உட்பட வரைவு அட்டவணையை போட்டியில் பங்கேற்கு அணிகளுக்கு அனுப்பி, அவர்களின் பரிந்துரைகளைக் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வரைவு அட்டவணையை தங்கள் அணியின் வல்லுநர் குழுவுக்கு அனுப்பி உள்ளது. அதில் சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதும், பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூரு மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதும் அணிக்கு உகந்ததாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளதாக தகவல். அதனால் ஆஸி.க்கு எதிராக சென்னையிலும், ஆப்கனுக்கு எதிராக பெங்களூருவிலும் விளையாட பாகிஸ்தான் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷீத் கான், நூர் அகமது போன்றவர்களை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சமாளிப்பது மிகவும் கடினம். இவர்கள் இருவரும் அண்மையில் முடிந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்காக சிறப்பாக பந்து வீசி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் போட்டி நடைபெறும் இடத்தை மாற்ற அணிகளுக்கு வலுவான காரணம் அவசியம் என தெரிவித்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் சொல்கின்றன. பாகிஸ்தான் அணி விளையாட உள்ள போட்டிகள் பெரும்பாலும் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறும் என்றே தெரிகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த தொடரில் அக்டோபர் 15-ம் தேதி அன்று அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in