

பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா 141 ரன்கள் விளாசினார்.
பர்மிங்காமில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 94 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 9, மார்னஷ் லபுஷேன் 0, ஸ்டீவ் ஸ்மித்16, டிராவிஸ் ஹெட் 50, கேமரூன் கிரீன் 38 ரன்களில் ஆட்டமிழந்தனர். உஸ்மான் காவாஜா 126, அலெக்ஸ் கேரி 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 116.1 ஓவரில் 386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அலெக்ஸ் கேரி 99 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் போல்டானார். உஸ்மான் கவாஜா 321 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 141 ரன்கள் விளாசிய நிலையில் ஆலி ராபின்சன் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.
6-வது விக்கெட்டுக்கு உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி ஜோடி 118 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய நேதன் லயன் 1, ஸ்காட் போலண்ட் 0, பாட்கம்மின்ஸ் 38 ரன்களில் வெளியேறினர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராடு, ஆலி ராபின்சன்ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், மொயின் அலி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 7 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. போப் மற்றும் ரூட் களத்தில் உள்ளனர்.