Published : 30 Oct 2017 09:39 AM
Last Updated : 30 Oct 2017 09:39 AM

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் த்ரில் வெற்றி: ஒருநாள் போட்டித் தொடரை வென்றது இந்தியா- ரோஹித் சர்மா 147, கோலி 113 ரன்கள் விளாசல், கடைசி கட்ட ஓவர்களில் பும்ரா அசத்தல்

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்தியா பேட்டிங்கை தொடங்கியது. ஷிகர் தவண் 14 ரன்களில் டிம் சவுத்தி பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் விராட் கோலி ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். ஆடம் மில்னே வீசிய 10-வது ஓவரில் ரோஹித் சர்மா மிட்விக்கெட் திசையில் அற்புதமாக சிக்ஸர் விளாசினார். முதல் பவர் பிளேவில் இந்திய அணி 53 ரன்கள் சேர்த்தது.

மிட்செல் சான்டர் வீசிய 14-வது ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்து அசத்திய ரோஹித் சர்மா 52 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் விராட் கோலி 59 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த ஜோடியின் சிறந்த பார்ட்னர்ஷிப் கட்டமைப்பால் 30 ஓவர்களில் இந்திய அணி 165 ரன்கள் சேர்த்தது.

சான்டர் வீசிய 28-வது ஓவரில் சிக்ஸர் அடித்த ரோஹித் சர்மா 106 பந்துகளில், 11 பவுண்டரிகள், 2 சிக்ஸருடன் சதம் விளாசினார். இது அவரது 15-வது சதமாக அமைந்தது. டிரென்ட் போல்ட் வீசிய 36-வது ஓவரில் விராட் கோலி ஒரு பவுண்டரியும், ரோஹித் சர்மா 3 பவுண்டரிகளும் விளாச இந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் சேர்க்கப்பட்டன. கிராண்ட் ஹோம் வீசிய அடுத்த ஓவரிலும் 3 பவுண்டரிகள் விளாசப்பட்டன. சான்டர் வீசிய 38-வது ஓவரில் கிரீஸூக்கு வெளியே வந்து விளையாடிய விராட் கோலி, பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸராக மாற்றினார். 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 252 ரன்கள் சேர்த்தது.

கடைசி பவர்பிளே எடுக்கப்பட்ட 2-வது ஓவரில், ரோஹித் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். லாங்க் ஆன் திசையில் அவர் தூக்கி அடித்த பந்து டிம் சவுத்தியிடம் கேட்ச் ஆனது. ரோஹித் சர்மா 138 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகளுடன் 147 ரன்கள் விளாசினார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 230 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்கினார்.

விராட் கோலி 96 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் தனது 32-வது சதத்தை அடித்தார். சான்டர் வீசிய 44-வது ஓவரில் பந்தை சிக்ஸருக்கு தூக்க முயன்றபோது ஹர்திக் பாண்டியா (8) ஆட்டமிழந்தார். இதையடுத்து தோனி களமிறங்கினார். விராட் கோலி 106 பந்துகளில், ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்த நிலையில் டிம் சவுத்தி பந்தில், வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் தோனி 27, கேதார் ஜாதவ் 18, தினேஷ் கார்த்திக் 4 ரன்கள் சேர்க்க 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுத்தி, ஆடம் மில்னே, சான்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து 338 ரன்கள் இலக்குடன் நியூஸிலாந்து பேட் செய்த நியூஸிலாந்து அணிக்கு காலின் மன்றோ அதிரடி தொடக்கம் கொடுத்தார்.

புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் விளாசப்பட்டன. 5 ஓவர்களில் 44 ரன்கள் விளாசப்பட்ட நிலையில் மார்ட்டின் கப்தில் (10), ஜஸ்பிரித் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வில்லியம்சன் களமிறங்கினார். புவனேஷ்வர் குமார் வீசிய 9-வது ஓவரிலும் காலின் மன்றோ இமாலய சிக்ஸர் ஒன்றை விளாசினார்.

10 ஓவர்களில் நியூஸிலாந்து 74 ரன்கள் சேர்த்தது. காலின் மன்றோ 38 பந்துகளில் அரை சதம் விளாச 15 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 100 ரன்களை கடந்தது. அவருக்கு உறுதுணையாக விளையாடிய வில்லியம்சன் 59 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த ஜோடியை நீண்ட போராட்டத்துக்கு பிறகு யுவேந்திரா சாஹல் பிரித்தார்.

காலின் மன்றோ 62 பந்துகளில், 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் போல்டானார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 109 ரன்கள் சேர்த்தது. சிறிது நேரத்தில் வில்லியம்சனையும் (64) வெளியேற்றினார் சாஹல். 4-வது விக்கெட்டுக்கு இணைந்த ராஸ் டெய்லர், டாம் லதாம் ஜோடி சீராக ரன்கள் சேர்த்தது. டெய்லர் 39 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினார். டாம் லதாம் 37 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா வீசிய 47-வது ஓவரில் ஹென்றி நிக்கோல்ஸ் தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாச இந்த ஓவரில் 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரில் ஹென்றி நிக்கோல்ஸ் (37) போல்டாக ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது. 3 ஓவர்களுக்கு 30 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் 47-வது ஓவரை வீசிய பும்ரா அற்புதமாக வீசி 5 ரன்கள் மட்டுமே வழங்கினார். மேலும் டாம் லதாமை (65) ரன் அவுட் ஆக்கினார். இதனால் நியூஸிலாந்து அணிக்கு நெருக்கடி அதிகமானது.

புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் சான்டர் சிக்ஸர் விளாச இந்த ஓவரில் 10 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பும்ரா வீசிய முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் சேர்க்கப்பட அடுத்த பந்தில் சான்டர் (9) ஆட்டமிழந்தார். இரு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நியூஸிலாந்து 5 ரன்களே சேர்த்தது. 50 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து 7 விக்கெட்கள் இழப்புக்கு 331 ரன்கள் சேர்த்தது. 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x