Published : 01 Oct 2017 10:23 AM
Last Updated : 01 Oct 2017 10:23 AM

முதல் டெஸ்ட் போட்டி: இலங்கைக்கு பாகிஸ்தான் அணி பதிலடி - அசார் அலி புதிய சாதனை

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்களை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸில் 419 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் அதிகபட்சமாக 155 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். கருணாரத்னே 93 ரன்களிலும், திக்வெலா 83 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பாகிஸ்தான் அணியில் முகமது அபாஸ், யாசிர் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஹசன் அலி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து ஆடவந்த பாகிஸ்தான் அணி, 2-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்களை எடுத்திருந்தது. ஷான் மசூத் 30 ரன்களுடனும், சமி அஸ்லாம் 31 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். 3-ம் நாளான நேற்று ஆட்டத்தைத் தொடர்ந்த இரு வீரர்களும் பொறுமையாக ஆடி, அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அவர்களின் நிதானமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி, 36.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. முதல் விக்கெட்டுக்கு 114 ரன்களை எடுத்த இந்த ஜோடியை பெரேரா பிரித்தார். 130 பந்துகளில் 51 ரன்களை எடுத்த சமி அஸ்லாம் பெரேராவின் பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த சிறிது நேரத்திலேயே ஹெராத்தின் பந்தில் போல்ட் ஆகி ஷான் மசூத் அவுட் ஆனார்.

அடுத்தடுத்து 2 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் அசார் அலியும், ஆசாத் ஷபிக்கும் சேர்ந்து பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினர். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 79 ரன்களைச் சேர்த்த நிலையில், ஆசாத் ஷபிக் 39 ரன்களில் ஆட்டம் இழந்தார். மறு முனையில் உறுதியாக ஆடிய அசார் அலி 139 பந்துகளில் தனது அரை சதத்தை அடித்தார். அவர் 32 ரன்களை எடுத்தபோது டெஸ்ட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்தார்.

இதன்மூலம் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த 8-வது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்தார். யூனிஸ் கான், மியான்தத், இன்சமாம் உல் ஹக், முகமது யூசுப், சலிம் மாலிக், மிஸ்பா உல் ஹக், ஜாகிர் அப்பாஸ் ஆகியோர் ஏற்கெனவே இந்த சாதனையை படைத்துள்ளனர். 32 வயதான அசார் அலி 61 டெஸ்ட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார்.

நேற்று ஆட்டநேர இறுதியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன்களை எடுத்திருந்தது. அசார் அலி 74 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்தார். இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸே முடியாததால் ஆட்டம் டிராவில் முடிய அதிக வாய்ப்புகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x