

அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி சரவணன்- அன்பு ரோஜா ஆகியோரது மகள் சர்வாணிகா(8). அங்குள்ள அரசு தொடக்க
பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். செஸ் விளையாட்டில் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
இதனிடையே, உலக சதுரங்க கழகம் சார்பில் ஜார்ஜியா நாட்டில் ஜூன் 6 முதல் 12-ம் தேதி வரை நடைபெற்ற செஸ் போட்டியில் சர்வாணிகா பங்கேற்றார். பல்வேறு
நாடுகளிலிருந்து வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், 8 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மொத்தம் நடைபெற்ற 11 சுற்றுகளில், 8 சுற்றுகளில் வென்று 3-ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், சொந்த ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்தநிலையில், தனது பெற்றோருடன் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று அரியலூர் வந்த சர்வாணிகாவுக்கு, அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகனீசன், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரவி, உடற்கல்வி ஆசிரியர் ஆர்.ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, நவம்பர் மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் செஸ் விளையாட்டுப் போட்டியில் சர்வாணிகா கலந்து கொள்ள உள்ளார். முன்னதாக, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னையில் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் சந்தித்து சர்வாணிகா வாழ்த்து பெற்றார்.