

கோவை: கோவையில் நேற்று நடந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நெல்லை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இத்தொடரின் 3-வது போட்டி மதுரை பேந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று மதியம் நடந்தது. டாஸ் வென்ற மதுரை பேந்தர்ஸ் அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.
அந்த அணியினர் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் குவித்தனர். தொடக்க வீரராக களமிறங்கிய ஹரி நிஷாந்த் 51 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். அதற்கு அடுத்தபடியாக வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களும், ஸ்வப்னில் கே சிங் 14 ரன்களும் எடுத்தனர். பந்து வீச்சில் நெல்லை அணியின் சார்பில் சோனு யாதவ், பொய்யாமொழி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதைத் தொடர்ந்து, நெல்லை ராயல் கிங்ஸ் அணியினர் பேட்டிங் செய்தனர். சிறப்பாக விளையாடிய அந்த அணியினர், 13.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். நெல்லை அணியின் சார்பில் அதிரடியாக விளையாடிய நிதீஷ் எஸ்.ராஜகோபால் 26 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
அருண் கார்த்திக் 32 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் மதுரை அணியின் சார்பில் பாலு சூர்யா, தேவ் ராகுல், கெளதம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 4-வது போட்டியாக நேற்று இரவு திண்டுக்கல் டிராகன்ஸ், பால்சி திருச்சி ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது.