Published : 29 Oct 2017 11:54 AM
Last Updated : 29 Oct 2017 11:54 AM

ஃபிபா யு-17 உலகக்கோப்பையை வென்று இளம் இங்கிலாந்து அணி வரலாறு

கொல்கத்தாவில் நடைபெற்ற ஃபிபா யு-17 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை 5-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக யு-17 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

இடைவேளை வரை ஸ்பெயின் ஆதிக்கம் இருந்தது, அதாவது 2-1 என்று ஸ்பெயின் முன்னிலை வகித்தது, ஆனால் இடைவேளைக்குப் பிறகு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட இங்கிலாந்து 4 கோல்களைத் திணித்து 5-2 என்று ஸ்பெயினுக்கு கடும் அதிர்ச்சியளித்து கோப்பையை வென்றது.

இறுதிப் போட்டிக்கு வருகை தந்த ரசிகர்கள் எண்ணிக்கை 66,684 என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் ஆர்வத்தை இரு அணிகளும் ஏமாற்றவில்லை.

தொடக்க கணங்களில் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் முதல் அரைமணி நேரத்தில் 2-0 என்று முன்னிலை பெற்றது. செர்ஜியோ கோம்ஸ் இரண்டு கோல்களையும் அடித்தார். வேகத்திலும் துல்லியத்திலும் இங்கிலாந்தை முறியடித்தது ஸ்பெயின். இந்நிலையில் இங்கிலாந்து தடுப்பாட்ட வீரர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 10-வது நிமிடத்தில் லெஃப் பேக் வீரர் யுவான் மிராண்டா கேப்டன் அபெல் ருய்ஸ் இருவரும் தங்களுக்குள் ஆடி பந்தை எடுத்துச் செல்ல கோம்ஸ் பினிஷ் செய்தார்.

மீண்டும் ஸ்பெயின் கேப்டன் மிக அருமையாக இங்கிலாந்து தடுப்பாட்ட வீரர்களிடத்தில் இடைவெளியைக் கண்டுபிடித்து பந்தை சீசர் கெலாபெர்ட்டிடம் கொடுக்க இவர் பாக்ஸ் முனையிலிருந்து தயாராக கோம்ஸ் இடது புறம் நகர கெலாபர்ட், கோம்சிடம் பந்தை அடிக்க அவர் தன் 2-வது கோலை அடித்தார், மிக அருமையான தன்னலமற்ற ஆட்டம்.

2 கோல்களை வாங்கிய இங்கிலாந்து அணியின் ஆட்டத்தில் இடைவேளைக்கு சற்று முன் மாற்றம் ஏற்பட்டது. 43-வது நிமிடத்தில் புரூஸ்டர் இங்கிலாந்தின் எண்ணிக்கையை அருமையான கோல் மூலம் தொடக்கினார். 58-வது நிமிடத்தில் இங்கிலாந்து மேலும் ஒரு கோலை அடித்து சமன் செய்தது. இம்முறை ஃபோடன் என்ற மிக அருமையான நடுக்கள வீரர் திறமையுடன் செசெக்னனிடம் ஸ்பானியர்களின் கடும் தடுப்பாட்ட சுவரின் ஊடே செசெக்னனிடம் பாஸ் செய்தார், அதனை செசக்னன், கிப்ஸ்-ஒயிட்டிடம் அடிக்க சமன் கோல் விழுந்தது.

பிறகு 69-வது நிமிடத்தில் ஃபோடன் தன் பங்குக்கு ஒரு கோலை அடிக்க இங்கிலாந்து முன்னிலை பெற்று 3-2 என்று இருந்தது. 73-வது நிமிடத்தில் ஏறக்குறைய ஸ்பெயின் 3-வது கோலை அடித்து சமன் செய்திருக்கும், கேப்ரன் ரூய்ஸின் ஷாட்டை செசக்னன் தடுத்தார்.

இந்நேரத்தில் இடது புறத்தில் இங்கிலாந்து வீரர் ஹட்சன்-ஓடோய் சமாளிக்க முடியாத ஒரு வீரராகத் திகழ்ந்தார். 84-வது நிமிடத்தில் இவர் ஃப்ரீ கிக்கில் 4-வது கோலுக்கான ஷாட்டை அடிக்க அதனை இங்கி. கேப்டன் லாட்டிபூதியர் கட்டுப்படுத்த, மார்க் குயேஹி கோலாக மாற்றினார், இங்கிலாந்து 4-2 என்று முன்னிலை.

88-வது நிமிடத்தில் ஹட்சன் - ஓடோய் கிராஸ் செய்ய ஃபோடன் அதனை கோலாக மாற்ற இங்கிலாந்து இளம் சாம்பியன் ஆனது. ஏற்கெனவே யு-20 உலகக்கோப்பையையும் இங்கிலாந்து வென்றிருந்தது, இப்போது இன்னொரு மகுடம் இந்தியாவில் கிடைத்துள்ளது.

விருதுகள்:

கோல்டன் பால்: பிலிப் ஃபோடன் (இங்கிலாந்து), 2. செர்ஜியோ கோம்ஸ் (ஸ்பெயின்), 3. ரியன் புரூஸ்டர் (இங்கிலாந்து)

கோல்டன் பூட்: ரியான் புரூஸ்டர் (இங்கிலாந்து, 8 கோல்கள் பெனால்டி 1), லசானா டியாயே (மாலி, 6 கோல்கள்), ஆபெல் ரூயிஸ் (ஸ்பெயின், 6, பெனால்டி 2).

கோல்டன் கிளவ்: கேப்ரியல் பிராஸோ (பிரேசில்)

நியாயமான முறையில் ஆட்டம்: பிரேசில்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x