

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நேற்று இங்கிலாந்திடமிருந்து ஆட்டத்தைப் பறிக்கும் விதமாக ஆடிய ரவீந்திர ஜடேஜா, ஆக்ரோஷமாக ஆடுவதே ஒரே உத்தி என்ற முடிவுடன் களமிறங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா 235/7 என்ற நிலையில் 211 ரன்களே முன்னிலை பெற்றிருந்தது. அப்போது ஜடேஜாவின் எதிர்த்தாக்குதல் ஆட்டத்தில் இங்கிலாந்து சற்றே நிலைகுலைந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு புதிய பந்தில் 8 ஓவர்களில் 65 ரன்கள் விளாசப்பட்டது. புவனேஷ் குமார் தனக்கு விடப்பட்ட கேட்ச் வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்தி 3வது அரைசதம் கண்டார். ஜடேஜா, புவனேஷ் கூட்டணி இணைந்து 99 ரன்களைச் சேர்த்தனர்.
தனது இன்னிங்ஸ் பற்றி ஜடேஜா, பிசிசிஐ.டிவி-க்குத் தெரிவிக்கும்போது, “களமிறங்கும் போதே முடிவெடுத்து விட்டேன், ஆக்ரோஷமாக ஆடுவது ஒன்றே எனக்கிருக்கும் வாய்ப்பு என்று தெரிந்தது. அந்த இடத்தில் நின்று ஆடுவது பயனளிக்காது என்று முடிவெடுத்தேன், சூழ்நிலைகளை மறந்து அடித்து ஆடுவது என்று ஆடினேன்.
நானும் புவனேஷ் குமாரும் சரளமாக ரன் அடிக்க முடிந்ததால் இங்கிலாந்தினால் ஒரு முனையில் நெருக்கடி கொடுக்க முடியவில்லை. புவனேஷ் ஆடிய 4 இன்னிங்ஸ்களும் அணிக்கு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தொடர் முழுதும் அவர் இவ்வாறு ஆடுவார் என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறினார் ஜடேஜா.
நேற்று தனது பந்துவீச்சு பற்றி அவர் குறிப்பிடுகையில், “நான் பந்து வீசும் போது பவுலர்களின் காலடித் தடம் உதவி புரிந்தது. இடது கை பேட்ஸ்மெனுக்கு கடினம்தான். சில பந்துகள் எழும்பும், சில பந்துகள் தாழ்வாக வரும். மேலும் சில பந்துகள் பயங்கரமாகத் திரும்பும்.
அதனால்தான் விக்கெட் கீப்பர் கொஞ்சம் தள்ளி நின்றால் கேட்ச் பிடிப்பது சுலபம் என்று கருதினோம். தோனி அதனால்தான் சற்று தள்ளி நின்றார். ஆனால் அது போலவே ஒரு எட்ஜ் ஆனது. அப்போது தோனி துரதிர்ஷ்டவசமாக முன்னால் நின்று கொண்டிருந்தார்.”
இவ்வாறு கூறினார் ஜடேஜா.