

ஷார்ஜா: ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள் அணி.
ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் அணி 36.1 ஓவரில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக விருத்தியா அரவிந்த் 70, முகமது வாசீம் 42, ரமீஸ் ஷாஜாத் 27 ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 23 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்து வலுவாகவே இருந்தது. ஆனால் மேற்கொண்டு 42 ரன்களை சேர்ப்பதற்குள் எஞ்சிய அனைத்து விக்கெட்களையும் தாரை வார்த்தது.
185 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 35.1 ஓவரில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. அறிமுக வீரரான அலிக் அத்தானாஸ் 45 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். முன்னதாக அவர், 26 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார். இதன் மூலம் அறிமுக போட்டியில் விரைவாக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இந்தியாவின் க்ருணல் பாண்டியாவுடன் பகிர்ந்து கொண்டார்.
ஷமர் புரூக்ஸ் 39, ராஸ்டன் சேஸ் 27 ரன்கள் சேர்த்தனர். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 78 ரன்கள் வித்தியாசத்திலும் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி கண்டிருந்தது.