

சென்னை: நாட்டின் 4 திசைகளிலும் மிகக் குறைந்த நேரத்தில் கார் மூலம் பயணம் செய்து மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் விஷ்ணுராவ் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பெண் குழந்தைகளின் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஜி.டி.விஷ்ணுராம், நாட்டின் 4 திசைகளிலும் செல்லும் வகையில் பயணத்தை கடந்த மாதம் 28-ம் தேதி சென்னையில் தொடங்கினார். இவர் அல்ட்ரா சைக்கிள் வீரர், உடற்பயிற்சி ஆர்வலர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர்.
16 மாநிலங்கள், 4 யூனியன் பிர தேசங்களை உள்ளடக்கிய 12,200 கி.மீ. தொலைவை இவர் 10 நாட்கள் மற்றும் 16 மணி என்ற மிகக் குறைந்த நேரத்தில் கடந்துள்ளார். இதன்மூலம் இந்தியாவின் நான்கு மூலைகளுக்கும் மிகக் குறைந்த நேரத்தில் கார் மூலம் பயணித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் ஜி.டி. விஷ்ணுராம்.
இதையடுத்து கின்னஸ் உலக சாதனை புத்தகம், ஆசிய சாதனை புத்தகம், இந்திய சாதனை புத்தகம்-2023 ஆகியவற்றில் அவர் இடம்பெறவுள்ளார். மேலும் முன்னதாக படைக்கப்பட்ட 401 மணிநேர கின்னஸ் உலக சாதனையை விஷ்ணுராம் முறியடித்து உள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி கின்னஸ் சாதனை படைத்ததற்கான சான்றிதழை விஷ்ணுராமுக்கு வழங்கினார்.
சாலைகள், கடினமான வழிகள், உணவு இல்லாமல் இருப்பது அல்லது மிகக் குறைவான உணவு இடைவேளை, தகவல் தொடர்பு நெட்வொர்க் இல்லாத சவாலான வானிலை ஆகிய சவால்களைச் சந்தித்து இந்த சாதனைப் பயணத்தை விஷ்ணுராம் நிறைவு செய்துள்ளார்.
இதுகுறித்து விஷ்ணுராம் கூறும்போது, “ பெண் குழந்தைகளுக்கு கல்விவழங்குவதன் அவசியத்தை உணர்த்துவதற்காக இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக திரட்டப்படும் நிதி, கோவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி, மேம்பாட்டுக்காக செலவிடப்படும்” என்றார்.