

நாங்கள் தகுதியானவர்கள்
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு நெதர்லாந்து ஸ்டிரைக்கர் அர்ஜென் ராபன் கூறியதாவது: “சிறந்த முறையில் போட்டியை நிறைவு செய்திருக்கிறோம். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதியில் கண்ட அதிர்ச்சி தோல்வியில் இருந்து ஓரளவு மீளலாம். நாங்கள் மிக அருகில் வந்து கோப்பையை இழந்திருக்கிறோம். அந்த ஏமாற்றம் இன்னும் எங்களுக்குள் இருக்கிறது. இந்த 3-வது இடத்துக்கு நாங்கள் தகுதியானவர்கள். எங்கள் அணியை நினைத்து பெருமை கொள்கிறேன்” என்றார்.
எனது எதிர்காலம் சம்மேளனத்தின் கையில்!
பிரேசில் அணியின் பயிற்சியாளர் லூயிஸ் பெலிப் ஸ்காலரி கூறும் போது, “எனது எதிர்காலம் (பயிற்சியாளர் பதவி) குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பிரேசில் கால்பந்து சம்மேளனத்திடம் விட்டுவிடுகிறேன். அது தொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் முடிவெடுக்கட்டும்.
உலகக் கோப்பையில் பிரேசில் அணியின் செயல்பாடு தொடர்பான இறுதி அறிக்கையை சம்மேளன தலைவரிடம் கொடுத்துவிட்டு, அணியை முன்னேற்றுவது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொறுப்பையும் அவரிடமே நாங்கள் விட்டுவிடுவோம்.
உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடாவிட்டாலும், 4-வது இடத்தைப் பிடித்திருக்கிறோம். அதற்காக வீரர்களை பாராட்டியாக வேண்டும். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு இணையாக ஆடினாலும், ஆரம்பத்திலேயே கோல் வாங்கியது பின்னடைவாக அமைந்தது” என்றார்.
நொறுங்கிப் போன பிரேசில் ரசிகர்கள்
ஜெர்மனியிடம் படுதோல்வி கண்ட பிரேசில், 3-வது இடத்துக்கான ஆட்டத்திலாவது சிறப்பாக ஆடுமா என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரேசிலுக்கு எதிராக நெதர்லாந்து கோலடித்தபோதெல்லாம் பிரேசில் ரசிகர்களின் கண்கள் குளமாகின. சில ரசிகர்கள் தங்கள் அணியை முற்றிலும் வெறுத்துவிட்டனர்.
பிரேசில் ரசிகர் ஒருவர் கூறுகையில், “எனது ஆதரவு நெதர்லாந்துக்குத்தான். எங்கள் அணி ஒன்றுக்கும் உதவாத அணி” என்றார். அந்த ரசிகர் நெதர்லாந்து அணியின் ஆரஞ்சு நிற டி-சர்ட்டை அணிந்திருந்தார்.