

சேலம்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்ற பெயரின் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் தொடக்க விழா வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“எனது கனவு நனவாகி உள்ளது. நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா குறித்து அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என நடராஜன் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
மைதானத்தின் திறப்பு விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுரவ தலைவர் பழனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ கே.எஸ்.விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராமசாமி, நடிகர் யோகி பாபு மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.
32 வயதான நடராஜன் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தவர், ஐபிஎல் கிரிக்கெட்டில் கடந்த 2017-ல் விளையாட தொடங்கினார். 2018 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். டொமஸ்டிக் கிரிக்கெட்டில் 2015 முதல் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வருகிறார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் ‘யார்க்கர்’ வீசுவதில் வல்லவர். கடந்த 2020-ல் ஆஸ்திரேலிய நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வடிவ கிரிக்கெட்டில் அதே பயணத்தில் அறிமுக வீரராக விளையாடினார். கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டில் அவர் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார்.