

லண்டன்: லண்டன் ஓவல் மைதானத்தில் தொடர்ந்து 3-வது அரை சதத்தை விளாசியுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷர்துல் தாக்குர், ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன், முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் ஆகியோரின் சாதனைகளை சமன் செய்துள்ளார்.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத் தின்போது ஷர்துல் தாக்குர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இவர் ஏற்கெனவே 2021-ல் ஓவலில் நடைபெற்ற போட்டிகளின்போது தொடர்ந்து 2 அரை சதங்கள் விளாசியிருந்தார். தற்போது நடைபெற்று வரும் போட்டியிலும் இவர் அரை சதம் விளாசியதையடுத்து தொடர்ந்து 3 அரை சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் இணைந்தார்.
இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், ஆலன் பார்டர் ஆகியோர் மட்டுமே லண்டன் ஓவல் மைதானத்தில் தொடர்ச்சியாக 3 அரை சதங்களை விளாசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.