

திருப்பூர்: கிரிக்கெட்டில் தற்போது அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கூறினார்.
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள 2-வது கிரிக்கெட் பயிற்சி மையத்தின் புதிய வலைப்பயிற்சி அரங்கைத் தொடங்கிவைத்த நடராஜன், அந்த வலைப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் இளம் விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து உற்சாகப்படுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அதிக வாய்ப்புகள் உள்ளன. இவற்றை விளையாட்டு வீரர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, என்னைப் போன்ற கிராமப்புற இளைஞர்கள் இவற்றைப் பயன்படுத்தி, முன்னுக்கு வர வேண்டும். ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் தேர்வாக வேண்டும் என்பதே எனது விருப்பம். 20 ஓவர், டெஸ்ட் என கிரிக்கெட் போட்டிகளை பிரித்துப் பார்க்க முடியாது. ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை.
தமிழகத்தை சேர்ந்த 13 பேர்...: டெஸ்ட் போட்டியில்தான் திறமையை நிரூபிக்க முடியும். நான்கிரிக்கெட்டில் நுழைந்த காலகட்டத்தில், அதிக வாய்ப்புகள் இல்லை. ஆனால், தற்போது நிறைய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஐபிஎல், டிஎன்பிஎல் போன்ற விளையாட்டுகள், வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகின்றன. டிஎன்பிஎல் மூலமாக தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர், ஐபிஎல் போட்டிகளில் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு நடராஜன் கூறினார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவிச் செயலர் பாபா, தலைமைப் பயிற்சியாளர் பிரகாஷ் உடனிருந்தனர்.