Published : 10 Jun 2023 06:01 AM
Last Updated : 10 Jun 2023 06:01 AM

‘டிஆர்எஸ், இம்பாக்ட் வீரர் முறை உண்டு’ - டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி கோவையில் ஜூன் 12-ல் தொடக்கம்

கோவை: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர், கோவையில் வரும் 12-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடக்கிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளன.

இதுதொடர்பாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் ஆர்.என்.பாபா கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2016-ம் ஆண்டு முதல் டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 7-வது சீசன் போட்டிகள் நடப்பாண்டு ஜூன் 12-ம் தேதி முதல் ஜூலை 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இத் தொடரில் பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 32 போட்டிகள் நடைபெறும். இதில் 28 போட்டிகள் லீக் முறையிலும், குவாலிபயர் 1, எலிமினேட்டர், குவாலிபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி ஆகிய 4 போட்டிகள் நாக் அவுட் முறையிலும் நடக்கின்றன.

போட்டிகள் மதியம் 3 மணி, இரவு 7 மணி ஆகிய நேரங்களில் நடைபெறும். கோவையில் வரும் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளன. 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டத்திலும், 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை சேலம் மாவட்டத்திலும், ஜூலை 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை திருநெல்வேலி மாவட்டத்திலும் போட்டிகள் நடக்கின்றன.

குவாலிபயர் 1, எலிமினேட்டர் ஆகியவை சேலம் மாவட்டத்திலும், குவாலிபயர் 2, இறுதிப் போட்டி ஆகியவை திருநெல்வேலி மாவட்டத்திலும் நடக்கின்றன. இந்த சீசனில் இம்பாக்ட் வீரர் விதி சேர்க்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்த சீசனில் டி.ஆர்.எஸ் விதி பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

லைகா கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் கூறும்போது, ‘‘கோவையில் ரசிகர்கள் கிரிக்கெட்டுக்கு எப்போதும் உற்சாகத்துடன் ஆதரவு தருபவர்களாக உள்ளனர். போட்டியிடும் இரண்டு அணிகளுக்குமே அவர்களின் ஆதரவு இருக்கும். ஓராண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் கோவையில் விளையாட உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. டிஆர்எஸ் முறை, இம்பாக்ட் வீரர் முறை ஆகியவை பயன் உள்ளதாக இருக்கும்’’ என்றார்.

இந்நிகழ்வின் போது, திருப்பூர் அணியின் வீரர் சாய் கிஷோர், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, செயலாளர் சண்முகம் கெளதமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x