

லண்டன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆட்டமிழந்த விதம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் 318 ரன்கள் இந்தியா பின்தங்கி உள்ளது.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ரோகித், கில், புஜாரா, கோலி, ஜடேஜா ஆகியோர் விக்கெட்டுகளை இழந்துள்ளனர். இதில் ஜடேஜா 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்தச் சூழலில் ரோகித் அவுட்டானது குறித்து சுனில் கவாஸ்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அண்மையில் முடிந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறந்த முறையில் பேட் செய்யவில்லை. அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் விரைந்து அவுட்டான விதத்தில் எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லை” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் இளம் வீரர் கில் மற்றும் புஜாரா அவுட்டான விதம் ஏமாற்றம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு அபாரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களது லைன் மற்றும் லெந்த்தை கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.