

புவனேஷ்வர்: இந்தியா, லெபனான், மங்கோலியா, வனுவாட்டு ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் இன்டர்காண்டினென்டல் கோப்பைக்கான கால்பந்து தொடர் இன்று (9-ம் தேதி) தொடங்கி வரும் 18-ம் தேதி வரை ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
கத்தாரில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கால்பந்து கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாகவே இந்திய அணி இன்டர்காண்டினென்டல் கோப்பை தொடரில் கலந்து கொள்கிறது. இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு மங்கோலியாவுடன் மோதுகிறது. முன்னதாக தொடரின் முதல் ஆட்டத்தில் லெபனான்–வனுவாட்டு அணிகள் மோத உள்ளன.
பிஃபா கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 101-வது இடத்திலும், மங்கோலியா 183-வது இடத்திலும் உள்ளன. இந்தத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுனில் சேத்ரி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் சுனில் சேத்ரி 131 சர்வதேச போட்டிகளில் பங்கேற்று 84 கோல்கள் அடித்துள்ளார். இன்டர்காண்டினென்டல் தொடரின் வரலாற்றில் இந்திய அணி 16 கோல்கள் அடித்துள்ளது. இதில் சுனில் சேத்ரி அடித்த கோல்கள் மட்டும் 11 ஆகும். இதில் அவர், அடித்த ஹாட்ரிக் கோலும் அடங்கும்.
இன்டர்காண்டினென்டல் தொடரில் கடந்த 2018-ம் ஆண்டு இந்திய அணி கோப்பையை வென்றிருந்தது. தொடர்ந்து 2019-ல் நடைபெற்ற தொடரில் இந்திய அணி 4-வது இடத்தை பிடித்து ஏமாற்றம் அளித்திருந்தது. 4 வருடங்களுக்கு பிறகு தற்போது நடைபெறும் தொடரில் இந்திய அணி சிறந்த திறனை வெளிப்படுத்த முயற்சி செய்யக்கூடும்.