உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: ஆஸி. 469 ரன் குவிப்பு - இந்திய அணி தடுமாற்றம்

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி
Updated on
2 min read

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 146, ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த ஜோடி நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. ஸ்டீவ் ஸ்மித் 229 பந்துகளில்,16 பவுண்டரிகளுடன் தனது 31-வது சதத்தை விளாசினார். டிராவிஸ் ஹெட் 174 பந்துகளில், ஒரு சிக்ஸர், 25 பவுண்டரிகளுடன் 163 ரன்கள் விளாசிய நிலையில் மொகமது சிராஜ் பந்தில் வெளியேறினார். 4-வது விக்கெட்டுக்கு ஸ்மித்துடன் இணைந்து டிராவிஸ் ஹெட் 285 ரன்கள் சேர்த்தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 6 ரன்களில் மொகமது ஷமி பந்தில் 2-வது சிலிப் திசையில் நின்ற ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த ஸ்மித் 268 பந்துகளில், 19 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்குர்பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். இதன் பின்னர் களம் புகுந்த அலெக்ஸ் கேரி அதிரடியாக விளையாடினார்.

மிட்செல் ஸ்டார்க் 5 ரன்னில் அக்சர் படேலின் அபாரமான த்ரோவால் ரன் அவுட் ஆனார். மட்டையை சுழற்றிய அலெக்ஸ் கேரி 69 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து நேதன் லயன் 9, பாட் கம்மின்ஸ் 9 ரன்களில் வெளியேற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 121.3 ஓவர்களில் 469 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் மொகமது சிராஜ் 4 விக்கெட்களையும், மொகமது ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி விரைவு கதியில் ரன்களை சேர்க்க முயன்றது. கேப்டன் ரோஹித் சர்மா 26 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஷுப்மன் கில் 13 ரன்னில் ஸ்காட் போலண்ட் பந்திலும், சேதேஷ்வர் புஜாரா 14 ரன்னில் கேமரூன் கிரீன் பந்திலும் ஸ்டெம்புகள் சிதற வெளியேறினர். விராட் கோலி 31 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஸ்மித்தின் அபாரமான கேட்ச்சால் நடையை கட்டினார்.

71 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் அஜிங்க்ய ரஹானே, ரவீந்திர ஜடேஜா ஜோடி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது. ஜடேஜா, 51 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். நிலையாக ஆடி வந்த அவர் லயன் பந்தில் விக்கெட்டை இழந்தார். 38 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 29 ரன்களுடனும், பரத் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in