

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களின் வேகபந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறிவருகின்றனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது. ட்ராவிஸ் ஹெட் சதமடித்தார். முதல் ஆட்ட நேர முடிவில் ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்தார். அணிக்கு பக்கபலமாக இருந்த ட்ராவிஸ் ஹெட் 163ரன்களில் அவுட்டானார். ஸ்மித் 121 ரன்களில் வெளியேறினார். அலெக்ஸ் கேரி மட்டும் 48 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். இதில் பேட் கம்மின்ஸ் வீசிய 6-வது ஓவரில் எல்பிடபள்யூ முறையில் 15 ரன்களில் அவுட்டானார் ரோஹித். அவரைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் அடுத்த ஓவரிலேயே 13 ரன்களில் போல்டாகி வெளியேறினார். புஜாரா, 14 ரன்களில் கேமரூன் கிரீன் வீசிய பந்தை பேட்டை தாண்டி அனுமதித்த விளைவு அவரும் போல்டாக விரால் கோலி இருக்கிறார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் புஜாராவின் அதே 14 ரன்களில் விராட் கோலியும் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்ப அணி தடுமாறியது.
இதன்பின் ரஹானே - ஜடேஜா இணைந்து அணியை மீட்டெடுக்கும் பணியை மேற்கொண்டனர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சீரான வேகத்தில் பவுண்டரிகளை விளாசிய ஜடேஜா 48 ரன்கள் சேர்த்த நிலையில் நாதன் லயன் சுழல்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ரஹானே - ஜடேஜா இணை 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் எடுத்தது.
இதையடுத்து, ஸ்ரீகர் பரத் களமிறங்கிய நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 38 ஓவருக்கு 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்துள்ளது. ரஹானே 29 ரன்களும், ஸ்ரீகர் பரத் 5 ரன்களும் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மானாக உள்ளனர்.