

லண்டன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்தப் போட்டி லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் பிரதான சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
“என்னை பொறுத்தவரையில் இந்திய அணி இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸிற்கான பவுலிங் அட்டாக்கை மட்டுமே கொண்டுள்ளது. இது மிகப்பெரிய தவறாகும். ஆஸ்திரேலிய அணியில் அதிகம் இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஜடேஜாவை காட்டிலும் அஸ்வின் அவர்களுக்கு இம்சை கொடுப்பார். ஆடுகளத்தில் புற்கள் உள்ளது. அதை நானும் பார்த்தேன். ஆனால், அதற்கு கீழ் பகுதி வறண்டு காணப்படுகிறது. அது எனக்கு தெளிவாக தெரிந்தது” என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
அஸ்வின், இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடி உள்ளார். இந்த அணியின் சொந்த மைதானம் ஓவல் தான். அதே நேரத்தில் அஸ்வின் ஆடும் லெவனில் இல்லாதது குறித்து ரசிகர்களும் தங்கள் கருத்துகளை சொல்லி வருகின்றனர்.