

சென்னை: தமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை மரிய அக்ஷிதா வரும் 17-ம் தேதி சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டிக்கும், அடுத்த மாதம் இத்தாலியில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தேர்வாகி உள்ளார்.
சமீபத்தில் லக்னோவில் நடைபெற்ற கேலோ இந்தியா பல்கலைக்கழக வாள் வீச்சு போட்டியில் ஃபாயில் தனிநர் பிரிவில் அக்ஷிதா தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் வருகிற 17-ம் தேதி முதல் 22 -ம் தேதி வரை சீனாவில் உள்ள ஊக்சியில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க அக்ஷிதா தேர்வாகி உள்ளார்.
இதேபோன்று வரும் ஜூலை 22-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை சீனாவில் உள்ள ஹாங்சூவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவும் இந்திய அணிக்காக தேர்வாகி உள்ளார் அக்ஷிதா.
சென்னையைச் சேர்ந்த 23வயதான மரிய அக்ஷிதா ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பி.ஏ. இளங்கலை பட்டம் பயின்றார். தொடர்ந்து பெங்களூரில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. இதழியல் முதுகலை பட்டமும் பயின்று வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாள்வீச்சு விளையாட்டில் பங்கேற்று வருகிறார்.