Published : 19 Jul 2014 10:00 AM
Last Updated : 19 Jul 2014 10:00 AM

ஜெர்மனி கேப்டன் பிலிப் லாம் ஓய்வு

ஜெர்மனி கால்பந்து அணியின் கேப்டன் பிலிப் லாம் சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி சாம்பியனான அடுத்த சில தினங்களில் சர்வதேச போட்டியிலிருந்து விடை பெற்றுள்ளார் பிலிப் லாம். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

நான் ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான தருணம். பிரேசிலில் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றபோதுதான் ஓய்வு முடிவை எடுத்தேன். இப்போது ஜெர்மனி கால்பந்து சம்மேளனத்தின் பாராட்டுதலோடு விடை பெறுகிறேன். உலகக் கோப்பையை வென்ற அடுத்த நாள் காலையில் உணவருந்திக் கொண்டிருந்தபோது எனது ஓய்வு முடிவு குறித்து பயிற்சியாளர் ஜோசிம் லீவிடம் தெரிவித்தேன்.

அதன்பிறகு ஜெர்மனி கால்பந்து சம்மேளன தலைவர் ஊல்பாங் நிசர்பேச்சிடம் தெரிவிக்கப்பட்டது. எங்களுடன் இணைந்து 10 ஆண்டுகள் பணிபுரிந்ததற்காக ஊல்பாங்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ஜெர்மனி கால்பந்து சங்க தலைவர் ஊல்பாங் கூறுகையில்,

“லாமின் ஓய்வு முடிவை விரைவாக நான் புரிந்து கொண்டேன். ஓய்வு குறித்த அவருடைய முடிவை மாற்றுமாறு அவரிடம் வலியுறுத்தும் பேச்சுக்கே இடமில்லை. லாம் அசாதாரண ஆட்டக்காரர் மட்டுமல்ல, அனைவருக்கும் முன்மாதிரியான வீரரும்கூட. ஜெர்மனி அணிக்காக அவர் செய்த பங்களிப்புக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஜெர்மனி அதிபர் ஏஞ்ஜெலா மெர்கல் கூறுகையில், “ஜெர்மனி அணிக்காக பிலிப் லாம் ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு மிகுந்த மரியாதை அளிக்க விரும்புகிறேன்” என்றார். 30 வயதான மத்திய பின்கள வீரரான பிலிப் லாம், 2004-ல் குரேஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கியபோது சர்வதேச போட்டியில் அறிமுகமானார். ஜெர்மனி அணிக்காக 113 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். சாம்பியன்ஸ் லீக், புந்தேஸ்லிகா உள்ளிட்ட போட்டிகளில் வாகை சூடிவிட்ட பிலிப் லாம், தற்போது உலகக் கோப்பையை வென்ற அணியிலும் இடம்பெற்றுவிட்டார்.

2010-ல் ஜெர்மனி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிலிப் லாம், அவருடைய தலைமுறையின் தலைசிறந்த தடுப்பாட்டக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். ஜெர்மனியின் ஏகோபித்த கேப்டனாகவும், பயிற்சியாளர் ஜோசிம் லீவின் நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்த பிலிப் லாம், ஜெர்மனிக்கு உலகக் கோப்பையை வென்று தந்த 4-வது கேப்டன் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

ஜெர்மனி அணி, உலகக் கோப்பையோடு நாடு திரும்பிய போது பெர்லினில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த சுமார் 5 லட்சம் ரசிகர்களை நோக்கி, கோப்பையை காண்பித்து அவர்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார் பிலிப் லாம். அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விரைவில் புதிய கேப்டன் அறிவிக்கப்படுவார் என ஜெர்மனி கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x