Published : 07 Jun 2023 06:52 AM
Last Updated : 07 Jun 2023 06:52 AM

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்

ரோகித் சர்மா மற்றும் கம்மின்ஸ்

லண்டன்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. வரும் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகலில் தொடங்குகிறது. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்தது என்பதால் இந்த போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையக்கூடும்.

இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளது. மீண்டும் ஒரு முறை ஐசிசி நடத்தும் தொடரில் கோப்பையை வெல்லும் கனவுடன் இந்திய அணி இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது. இந்திய அணி கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்தது. அதன் பின்னர் 10 ஆண்டுகளில் இந்திய அணி நாக் அவுட் சுற்றை கடக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்த காலக்கட்டத்தில் இந்திய 3 முறை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. 4 முறை அரை இறுதியுடன் வெளியேறியது. 2021-ம் டி 20 உலகக் கோப்பையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக லீக் சுற்றுடன் இந்திய அணி விடை பெற்றது. ஐசிசி தொடரை வெல்ல முடியாத சோகத்துக்கு இம்முறை இந்திய அணி வீரர்கள் தீர்வு காணக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 6 டெஸ்ட் தொடர்களை விளையாடியது. இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை மட்டுமே இழந்தது. நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களை வென்றது. இங்கிலாந்தில் கடினமான தொடரை சமன் செய்தது.

2021-ல் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது எதிர்வினையை ஏற்படுத்தியது. எனினும் இம்முறை போட்டி நடைபெறும் மைதானம் தி ஓவல் என்பதால் இந்திய அணி நிர்வாகம் சற்று சிந்திக்கக்கூடும். இந்த மைதானம் சுழலுக்கும் சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கக் கூடும்.

ரிஷப் பந்த் இல்லாத நிலையில் அவரது இடத்தில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்பு உள்ளது. பிரதான வேகப்பந்து வீச்சாளர்களாக மொகமது ஷமி, மொகமது சிராஜ் இடம் பெறுவார்கள். 3-வது வேகப்பந்து வீச்சாளராக உமேஷ் யாதவ் அல்லது ஷர்துல் தாக்குருக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

பேட்டிங்கை பொறுத்தவரையில் விராட் கோலி, ஷுப்மன் கில் சமீபகாலமாக ரன் வேட்டை நிகழ்த்தி வருகின்றனர். இவர்களிடம் இருந்து பெரிய அளவிலான பங்களிப்பு வெளிப்படக்கூடும். புஜாரா, ஏராளமான கவுண்டி போட்டிகளில் விளையாடி உள்ளதால் அந்த அனுபவத்தை பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். அஜிங்க்ய ரஹானே, இங்கிலாந்து ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடக் கூடியவர். இவர்களுடன் ரோஹித் சர்மாவும் பொறுப்புடன் விளையாடும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் அளிக்கலாம்.

ஆஸ்திரேலிய அணியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி உள்ளது. பேட்டிங்கில் உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன் ஆகியோர் அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியவர்கள். இதில் ஸ்டீவ் ஸ்மித், ஓவல் மைதானத்தில் ஏறக்குறைய 100 சராசரியை வைத்துள்ளார். இதனால் அவர், இந்திய பந்து வீச்சுக்கு அச்சுறுத்தல் கொடுக்கக்கூடும். டேவிட்வார்னர் அணியில் தனது இடத்தைதக்க வைத்துக்கொள்ள வேண்டுமானால் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.

ஐபிஎல் தொடரின் இறுதிப்பகுதியில் அதிரடியாக விளையாடிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் சிறந்த திறனை வெளிப்படுத்தக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட் ஆகியோரை உள்ளடக்கிய வேகப்பந்து வீச்சு துறையும் நேதன் லயனின் சுழலும் இந்திய பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.

அணிகள் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கே.எஸ்.பரத், இஷான் கிஷன், அஜிங்க்யரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின்,ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட், மொகமது ஷமி, மொகமது சிராஜ், உமேஷ் யாதவ்.

ஆஸ்திரேலியா: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஷ் லபுஷேன், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் கிரீன்,நேதன் யலன், டாட் மர்பி, அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், மைக்கேல் நேசர், ஜோஷ் இங்லிஸ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x