

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) சார்பில் வரும் 25ம்-தேதி முதல் கோடைகால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம், நேரு பார்க், அசோக் நகர் புதூர் கிரிக்கெட் அகாடமி, வேளச்சேரி நீச்சல் வளாகம் ஆகிய விளையாட்டு அரங்குகளில் இந்த பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், வாள்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ஹாக்கி, ஜூடோ, கோ-கோ, கபடி, டென்னிஸ், டேக்வாண்டோ, வாலிபால், டேபிள் டென்னிஸ் ஆகிய பிரிவுகளில் பயிற்சியளிக்கப்படவுள்ளன.
இந்த பயிற்சி முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட பயிற்சி முகாம் வரும் 25-ம் தேதி முதல் மே 9-ம் தேதி வரையும், 2-வது கட்ட பயிற்சி முகாம் மே 12-ம்
தேதி முதல் மே 26-ம் தேதி வரையும் நடைபெறவுள்ளன. இதுதவிர மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நீச்சல் குளம், செனாய்நகர் நீச்சல் குளம், வேளச்சேரி நீச்சல் குளம் ஆகியவற்றில் நீச்சல் பழகும் திட்டம் என்ற பெயரில் நீச்சல் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மைதானங்களின் அதிகாரிகளை தொடர்புகொள்ளளாம்.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.