Published : 06 Jun 2023 01:22 PM Last Updated : 06 Jun 2023 01:22 PM
192 சர்வதேச போட்டிகள், 8268 ரன்கள்: ரஹானே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சுமார் 17 மாதங்களுக்குப் பிறகு இடம் பிடித்துள்ளார் ரஹானே. நாளை தொடங்க உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அவர் அங்கம் வகிக்கிறார். இன்று அவருக்கு பிறந்தநாள். அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாடி இருந்தார்.
லண்டனில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் இந்திய அணிக்காக அளித்துள்ள சிறப்பான பங்களிப்பு குறித்து தற்போது பார்ப்போம். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாகவும் ரஹானே செயல்பட்டுள்ளார்.
இதே நாளில் கடந்த 1988-ல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார் ரஹானே.
டொமஸ்டிக் கிரிக்கெட்டில் மும்பை கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார்.
கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட ரஹானேவுக்கு 7 வயதில் டோம்விலியில் முறையான கிரிக்கெட் பயிற்சியை தொடங்கினார். 17 வயது முதல் இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரவீன் ஆம்ரேவிடம் பயிற்சி பெறுகிற வாய்ப்பு கிடைத்தது.
அண்டர் 19 கிரிக்கெட், ஃபர்ஸ்ட்-கிளாஸ் கிரிக்கெட், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட ரஹானேவுக்கு 2011-ல் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிட்டியது. அதே ஆண்டு நவம்பர் மாதம் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வானார்.
ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஆடும் லெவனில் இடம் பிடிக்க சுமார் 16 மாத காலம் காத்திருந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் 7 வீரர்கள் இந்தியா அணிக்காக அறிமுகமாகி இருந்தனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் (2013) ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக களம் கண்டார். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான 278-வது வீரர். அந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறு இன்னிங்ஸ் விளையாடி, 217 ரன்கள் எடுத்திருந்தார். இரண்டு அரை சதங்கள் இதில் அடங்கும்.
2014 முதல் 2019 வரையில் ஆண்டுக்கு சுமார் 500+ ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்திருந்தார்.
2021-ல் அவரது ஃபார்ம் மோசமடைந்தது. தொடர்ந்து 2022 ஜனவரிக்கு பிறகு அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.
இருந்தபோதும் எதையும் கண்டு கொள்ளாமல் உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். இந்த சூழலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம் பிடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 80 போட்டிகளில், 140 இன்னிங்ஸ் விளையாடியுள்ள ரஹானே, 4,931 ரன்கள் குவித்துள்ளார். 12 சதம் மற்றும் 25 அரைசதங்கள் இதில் அடங்கும்.
இந்திய அணிக்காக 192 (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) போட்டிகளில் விளையாடி, 8,268 ரன்கள் குவித்துள்ளார்.
ரஹானேவும் கேப்டன்சியும்
இந்திய கிரிக்கெட் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 முறை வழிநடத்தியுள்ளார் ரஹானே. அதில் 4 முறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. கடந்த 2020-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ரஹானே கேப்டனாக செயல்பட்டார். அதில் 2 போட்டிகளில் வெற்றி மற்றும் 1 போட்டி சமனில் முடிந்தது. அதன் மூலம் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் வென்றது. அப்போது கேப்டன் ரஹானேவை ரசிகர்கள் வெகுவாக போற்றி இருந்தனர். அடிலெய்டில் மோசமான தோல்விக்கு பிறகு பெற்ற வெற்றி இது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அனுபவம் இல்லாத வீரர்களைக் கொண்டு ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண செய்தார் ரஹானே.
வெளிநாடுகளில் ரஹானேவின் டெஸ்ட் கிரிக்கெட் ரன்கள்
வெலிங்டனில் 118 ரன்கள்
லார்ட்ஸ் 103 ரன்கள்
மெல்போர்னில் 147 ரன்கள்
கொழும்பில் 126 ரன்கள்
ஜமைக்காவில் 108* ரன்கள்
நாட்டிங்காமில் 81 ரன்கள்
மெல்போர்னில் 112 ரன்கள்
அவர் பதிவு செய்துள்ள 12 டெஸ்ட் கிரிக்கெட் சதங்களில் 8 சதங்கள் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்டவை.
WRITE A COMMENT