

ஷார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷார்ஜாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 47.1 ஓவரில் 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக அலி நசீர் 58, விருத்தியா அரவிந்த் 40 ரன்கள் சேர்த்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்களை வீழ்த்தினார். டோமினிக் டிரேக்ஸ், ஒடியன் ஸ்மித், யானிக் கரியா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
203 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 35.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான பிரண்டன் கிங் 112 பந்துகளில், 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 112 ரன்கள் விளாசினார்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இது அவருக்கு முதல் சதமாக அமைந்தது. ஜான்சன் சார்லஸ் 24, ஷமர் புரூக்ஸ் 44, கீசி கார்டி 7, ஷாய் ஹோப் 13 ரன்கள் சேர்த்தனர். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.