

லண்டன்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை (7-ம் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் லண்டனில் செய்தியாளர்களிடம் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:
ஐபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் புகழை எட்டியுள்ளன. இதனால் டெஸ்ட் போட்டியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. டெஸ்ட் போட்டிகள் காணாமல் போய்விடுமோ என்று நான் சிறிது கவலைப்படுகிறேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்றுமே அழிவில்லை. அது நேற்றும், இன்றும், என்றும் நிலைத்து நிற்கும். தற்போதைய நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் சிறப்பான இடத்திலேயே இருப்பதாக நான் நினைக்கிறேன்.
நான் என்றுமே ஒரு பழமைவாதி. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை என்றும் விரும்புபவன். உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் நம்பிக்கையாக உள்ளன. உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சலாலான விஷயமாக இருக்கும். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என இரு தரப்பினருமே எதிரணியின் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள்தான்.
மொகமது ஷமி, மொகமது சிராஜ் ஆகிய இருவரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோன்று இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள், அனைத்து நாடுகளிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள். அஸ்வின், ஜடேஜா இருவருமே எதிரணியை மிரட்டுபவர்கள்தான். இவ்வாறு அவர் கூறினார்.