

ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கப் பதக்கம் வென்றார்.
ஜெர்மனியின் சுஹ்ல் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் தனுஷ் ஸ்ரீகாந்த் 249.4 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தார். சுவீடனைச் சேர்ந்த போன்டஸ் கலின் 248.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். பிரான்ஸின் ரோமெய்ன் அஃப்ரேர் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்தத் தொடரில் இந்தியா 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 2 தங்கம், ஒரு வெள்ளியுடன் அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது.