Published : 12 Oct 2017 10:26 AM
Last Updated : 12 Oct 2017 10:26 AM

வெற்றியின் புகழ் பந்து வீச்சாளர்களுக்கே: ஆஸ்திரேலிய கேப்டன் வார்னர் குதூகலம்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி குவாஹாட்டியில் நேற்று முன்தினம் நடந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 118 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 27, ஹர்திக் பாண்டியா 25 ரன்களை சேர்த்தனர். ரோஹித் சர்மா 8, ஷிகர் தவண் 2, விராட் கோலி 0, மணிஷ் பாண்டே 6, தோனி 13 ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஆஸ்திரேலிய அணியில் பெஹ்ரென்டோர்ப், 21 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி, 15.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் ஹென்ரிக்ஸ் 62, டிராவிஸ் ஹெட் 48 ரன்களைக் குவித்தனர். 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, 1-1 என்ற கணக்கில் டி20 போட்டித் தொடரை சமன் செய்தது. 4 விக்கெட்களை வீழ்த்திய பெஹ்ரென்டோர்ப், ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்போட்டியில் வென்றது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:

இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதற்கான பெருமை பந்து வீச்சாளர்களையே சாரும். ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே இந்திய அணியின் விக்கெட்களை அவர்கள் அடுத்தடுத்து வீழ்த்தியது ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டது. பெஹ்ரென்டோர்ப் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார். அவர் பந்தை நன்றாக ஸ்விங் செய்தும், பவுன்ஸ் செய்தும் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி ஏற்கெனவே அனுபவம் பெற்றவர் என்பதால் ஹென்ரிக்ஸை முன்னதாக பேட்டிங் செய்ய களம் இறக்கினோம். அவரும் சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இவ்வாறு டேவிட் வார்னர் கூறினார்.

விராட் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது, “நாங்கள் எதிர்பார்த்தபடி இப்போட்டியில் ஆட முடியவில்லை. குறிப்பாக பேட்டிங்கில் நிறைய ரன்களைச் சேர்க்க முடியவில்லை.

அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டது. இப்போட்டியில் பெஹ்ரென்டோர்பின் பந்துவீச்சு தரமானதாக இருந்தது. அவர் எங்களுக்கு சவால் விடும் வகையில் பந்து வீசினார்” என்றார். - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x