Last Updated : 26 Oct, 2017 04:57 PM

 

Published : 26 Oct 2017 04:57 PM
Last Updated : 26 Oct 2017 04:57 PM

பிட்ச் பராமரிப்பாளர்களுக்கு நல்ல சம்பளம் தேவை: முன்னாள் பிசிசிஐ பிட்ச் கமிட்டி சேர்மன் வெங்கட் சுந்தரம் பேட்டி

 புனே பிட்ச் பராமரிப்பாளர் பாண்டுரங் சல்கோங்கர் தனியார் தொலைக்காட்சி ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் சிக்கி நீக்கப்பட்டதையடுத்து, பிசிசிஐ பிட்ச் கமிட்டி முன்னாள் சேர்மன் வெங்கட் சுந்தரம், பிட்ச் பராமரிப்பாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

பாண்டுரங் சல்கோங்கர் விவகாரத்தை எப்படி அணுகுகிறீர்கள்?

ஒரு தனிநபர் ஊழலில் ஈடுபடுகிறார் என்பதற்காக ஒட்டுமொத்த பிட்ச் பராமரிப்புக் குழுவையுமே அது ஊழலாக்கிவிடாது. மீடிய ஸ்டிங் ஆபரேஷனில் அவர் அந்தப் பொறியில் வீழ்ந்திருக்கலாம். ஆனால் பணம் எதுவும் கைமாறவில்லை, பிக்சிங் இல்லை. ஸ்டிங் ஆபரேஷன் அதில் அவர் அம்பலமானார். அவர் குற்றமிழைத்தவர் என்றால் சட்டம் தன் கடமையைச் செய்யும். ஆனாலும் இதற்கு இன்னொரு கோணமும் உள்ளது.

அது என்ன?

பிட்ச் பராமரிப்பாளர்களுக்கு குறைவான சம்பளம் தரப்படுகிறது. ஒரு உடற்பயிற்சியாளர், மசாஜர் அல்லது வீடியோ அனலிஸ்ட் ஆகியோருக்கு கொடுக்கப்படும் தொகையைக் கவனியுங்கள். நான் தலைமைப் பிட்ச் பரமாரிப்பாளராக இருந்த போது அப்போதைய பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசனிடம் நான் இது பற்றி ஆலோசித்துள்ளேன். இவர்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்களாக இருந்தால் பிசிசிஐ ஓய்வூதியம் இருக்கும் அதனால் பணத்துக்காக இவர்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் கிரவுண்ட்ஸ்மென்களை எளிதில் வசப்படுத்தி விடலாம். கடந்த காலங்களில் முக்கிய கிரிக்கெட் வீரர்கள் கிரவுண்ட்ஸ்மேனை வசப்படுத்த முயன்ற சம்பவங்கள் உண்டு.

சமீபத்தில் கான்பூரில் இவ்வாறு நடந்தது (கிரவுண்ட்ஸ்மேன் புக்கிகளுக்குத் தகவல் அளித்தார்), இவர்கள் உடனடியாக நீக்கப்பட்டனர். இவர்களுக்கு சரியான சம்பளம் இல்லை. ஊக்கத்தொகை கிடையாது, பிற பயன்களும் கிடையாது.

குறைந்த ஊதியம்தான் பிட்ச் பராமரிப்பாளரை ஊழல் நோக்கி நகர்த்துகிறது என்று கூறுகிறீர்களா?

ஒரு விஷயத்தை கூறி விடுகிறேன். பிட்ச் தயாரிப்பில் பல்விதமான தலையீடுகள் பலமட்டங்களில் உள்ளன. புக்கிகளை மட்டும் ஏன் கூற வேண்டும்? உங்கள் அணி கேப்டனே பிட்ச் இந்த மாதிரி வேண்டும் என்று கேட்பார். உங்கள் அணி மேலாளர் வேறொரு பிட்சை விரும்புவார், வாரியத் தலைவருக்கும் இதில் தலையீடு செய்யும் தருணங்கள் வாய்க்கும். பிட்ச் பராமரிப்பாளரை புழு போல்தான் பாவிக்கின்றனர். என்னைப் போன்ற மூத்தோர் இவர்களைப் புறக்கணிக்க முடியும். ஆனால் அதிக கல்வியறிவு இல்லாதவர்கள் இத்தகைய நபர்களுடன் கூட்டத்தில் அமரக்கூட முடியாது.

...இதனால்தான் பிட்ச்கள் மோசமாக இருக்கின்றனவா? இது போன்ற ஒன்றைத்தான் தாங்கள் கூற வருகிறீர்களா?

நான் ஊடகத்தையோ, மக்களையோ பிட்ச் விவகாரத்தில் திருப்திபடுத்த முடியாது. நல்ல பிட்ச், மோசமான பிட்ச் என்று எதுவும் இல்லை. பிட்ச்தான் எல்லாமும். 2009-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் டெல்லி பிட்ச் மோசமானதாகப் போனது. அந்த மைதானமே ஓர் ஆண்டுக்குத் தடை செய்யப்பட்டது. எனவே விஷயங்கள் தவறாகப் போனால் விழித்துக் கொள்வார்கள். இல்லையென்றால் செய்தி இல்லை. சல்கோங்கர் அங்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியிருந்தால் அங்கு எல்லாம் முடிந்திருக்கும். ஆனால் அவர் ஆட்டத்தில் சிக்கினார்.

பிட்சில் அன்னியர்கள் நுழைவதைக் கண்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். முன்னாள் சிஏபி பிட்ச் பராமரிப்பாளர் பிரபீர் முகர்ஜி ஒருமுறை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஆர்தர்டனை ஈடன் கார்டனில் பிட்ச் அருகே வர சம்மதிக்கவில்லை. ஆனால் இங்கு எப்படி பிட்சிற்குள் அன்னியர்கள் நுழைய முடிகிறது?

நான் ஒப்புக் கொள்கிறேன், பிட்ச் அருகே செல்ல ஒருவருக்கும் அனுமதி இல்லை. சர்வதேச போட்டிகளின் போது நான் ஒருவரையும் பிட்சிற்கு அணுக விட மாட்டேன். 2005-ல் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக நாங்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது, அந்தப் போட்டியைக் காண வருகை தந்த பாகிஸ்தான் அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரப் அணிந்திருந்த ஷூ காரணமாக பிட்ச் அருகில் வர அனுமதி தர மறுத்தோம். நான் அவரது ஷூவை அகற்றி விட்டு வரவும் என்றேன் அவர் மறுத்தார். பெரிய நாடகம்தான் ஆனால் நான் என் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தேன்.

இத்தகைய சர்ச்சைகளைத் தவிர்ப்பது எப்படி?

ஊதியம் இரட்டிப்பாக்கப் படவேண்டும். அனைத்துப் பராமரிப்பாளர்களுக்கும் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஊதியம் அளிப்பதில்லை. பிசிசிஐ பிட்ச் பராமரிப்பாளர்கள் - 10 அல்லது 15 பேர்களுக்கு மட்டும்தான் பிசிசிஐ ஊதியம் வழங்குகிறது. மீதிப் பேருக்கு மாநில வாரியங்கள்தான் ஊதியம் வழங்குகின்றன. இதுவும் காலத்திற்கு அவர்கள் கைக்கு வந்து சேர்வதில்லை. இந்த நிலைமையில்தான் இருக்கிறோம், இவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்க வேண்டும். பிட்ச் பராமரிப்பாளர் பணி கடினமானது. ஒரு மாநில பயிற்சியாளருக்கு அளிக்கும் ஊதியம் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நல்ல ஊதியம் வழங்கினால் இத்தகைய சிக்கல்கள் ஏற்படாது.

இது நோக்கத்தை நிறைவேற்றுமா?

மாநில பயிற்சியாளர் 6 மாதங்கள் பணியாற்றுகிறார். பிட்ச் பராமரிப்பாளர்கள் ஆண்டு முழுதும் பணியாற்றுகின்றனர். பிறகு, பயிற்சியாளர் பிட்சை மாற்ற வேண்டும் என்று கோரும் தருணங்கள் இருக்கின்றன. அதனால்தான் ரஞ்சி போட்டிகளுக்கு நடுநிலை பிட்ச் பரமாரிப்பாளர்களை பிசிசிஐ நியமித்துள்ளது. அனைவரும் பிட்ச்களை தங்களுக்குச் சாதகமாக அமைக்க முற்படுகின்றனர். அதாவது போட்டியை வெல்ல வேண்டும் என்பதே இவர்கள் எண்ணம். எனவே இந்தப் புள்ளிகளை ஒன்றிணைத்துப் பாருங்கள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் பிட்ச் பராமரிப்பாளர்களை யாரும் அணுக முடியாது, அவர்கள் ஒருவர் சொல்வதையும் கேட்க மாட்டார்கள்.

சல்கோங்கர் பற்றி...

சல்கோங்கர் கிரிக்கெட் அறிவு மிகுந்த ஒரு வீரர். இன்று முன்னாள் கிரிக்கெட் வீர்ர்கள் பலர் வர்ணனையில் நன்றாக சம்பாதிக்கின்றனர், ஆனால் சல்கோங்கருக்கு இது வாய்க்கவில்லை. நான் அவருக்கு ஆதரவாகப் பேசவில்லை. அவர் ஒரு சிறு கிராமத்திலிருந்து வந்தவர். அவர் ஒரு பொறிபறக்கும் வேகப்பந்து வீச்சாளர், இந்தியாவிலேயே வேகமாக வீசிய ஒரு பவுலர் என்றால் அது சல்கோங்கர் என்று கூறலாம். நானும் அவரும் சேர்ந்து நிறைய ஆடிஉள்ளோம். இந்திய அணியுடன் இலங்கைக்கு சென்றுள்ளார். மதன்லால் அப்போது அணியில் இருந்தார். நான் இவருக்கு எதிராகவும் ஆடியிருக்கிறேன்.

பிரச்சினை எங்கு உள்ளது?

இவர்களுக்கு கிளவ்கள் கிடையாது, ஹெல்மெட்கள் கிடையாது. மிகவும் ரிஸ்கான பணி, அவர்கள் இறந்தால் என்ன நடக்கும்? பணியிலிருக்கும் போது பிட்ச் பராமரிப்பாளர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதுண்டு. சர்வதேச போட்டி ஒன்றின் போது பிட்சில் மயங்கி விழுந்த பராமரிப்பாளர் ஒருவரை நான் மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். இன்னொரு சிறுவர் கையில் காயமடைந்தார். இவர்கள் அனைவரும் ஏழைமக்கள். நல்ல பிட்சைத் தயாரிக்க வேண்டும் என்ற அழுத்தம் உள்ளது. இவர்களையும் பாராட்டை எதிர்பார்க்கும் எளிமையானவர்கள். உங்களைப் போல் என்னைப்போல் இவர்களும் மனிதர்கள்தானே.

எனவே ஊதிய உயர்வுதான் பிரச்சினைக்குத் தீர்வு என்கிறீர்கள்?

பிட்ச் தயாரிப்புக்கு எத்தனை பேர் வருகின்றனர்? முக்கிய கிரிக்கெட் வீர்ர்கள் இந்தப் பணிக்கு வரமாட்டார்கள், காரணம் இதில் பணம் இல்லை. பிட்ச் பராமரிப்பாளருக்கு ரூ.1 கோடி கொடுத்தால் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் பிட்ச் தயாரிப்பில் கவனமேற்கொள்வார்கள். இப்படித்தான் உள்ளது.

ஐசிசி பிட்ச் ஆலோசகர் ஆன்டி அட்கின்சன் ஒருமுறை கூறும்போது, நாம் கருத்தில் கொண்டிருக்கும் பிட்சை வடிவமைப்பதில் 40% அதற்கு நெருக்கமாக வடிவமைத்தாலே பெரிய சாதனை என்றார், ஒரு துல்லியமான பிட்சை தயாரிப்பது என்பது அவ்வளவு கடினமான பணியாகும். இது தொழில்நுட்ப ரீதியானது. இத்தகைய (சல்கோங்கர்) நிகழ்வுகள் நடக்காமல் இருக்க சூழ்நிலைகளில் பெரிய முன்னேற்றம் தேவை.

இவ்வாறு ஸ்போர்ட்ஸ்டார் பேட்டியில் கூறியுள்ளார் வெங்கட் சுந்தரம்

தமிழில்: ஆர்.முத்துக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x