Published : 05 Jun 2023 09:28 PM
Last Updated : 05 Jun 2023 09:28 PM

WTC Final | இந்தியா vs ஆஸ்திரேலியா: ஓவல் மைதானம் எப்படி? - சிறப்புப் பார்வை

ஓவல் மைதானம்

வரும் புதன்கிழமை அன்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்க உள்ளது. இந்தப் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாடுகின்றன. இங்கிலாந்து நாட்டின் லண்டனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கென்னிங்டனில் உள்ள ‘தி ஓவல்’ கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இந்த மைதானத்தின் ஆடுகள தன்மை, பேட்டிங் மற்றும் பவுலிங் சாதகம், இரு அணிகளின் கடந்த கால செயல்பாடு, வானிலை நிலவரம் என அனைத்தையும் இதில் பார்ப்போம். கடந்த 2017 முதல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி தான் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தி ஓவல் மைதானம்: ஓவல் மைதானம் தற்போது அமைந்துள்ள பகுதியில் கடந்த 18-ம் நூற்றாண்டில் இருந்து கிரிக்கெட் விளையாடப்பட்டு வருகிறது. அப்போது இந்த இடம் கென்னிங்டன் காமன் என அறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு லண்டன் மற்றும் டார்ட்ஃபோர்ட் கிளப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி விளையாடப்பட்டு உள்ளது. 1845-ல் மைதானம் கட்டப்பட்டுள்ளது. கவுன்ட்டி கிரிக்கெட் அணியான சர்ரே அணியின் ஹோம் கிரவுண்டாக இந்த மைதானம் உள்ளது. 1880 முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கால்பந்து மற்றும் ரக்பி போட்டிகளும் இங்கு நடைபெற்றுள்ளன. இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் சர்வதேச கிரிக்கெட போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின.

ஓவல் மைதானத்தில் இதுவரை 104 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இங்கிலாந்து அணி 43 போட்டிகளிலும், வெளிநாட்டு அணிகள் 23 போட்டிகளிலும் வென்றுள்ளன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி விளையாடப்பட உள்ள ஆடுகளம்

ஆடுகளம் எப்படி? - இந்த மைதானத்தில் டாஸ் வென்ற அணிக்கான வெற்றி வாய்ப்பு 34.62 சதவீதம் (36 போட்டிகள்). அதே போல முதலில் பேட் செய்யும் அணிக்கான வெற்றி வாய்ப்பு 35.58 சதவீதம் (37 போட்டிகள்). இரண்டாவதாக பேட் செய்யும் அணிக்கான வெற்றி வாய்ப்பு 27.88 சதவீதம் என உள்ளது. ஆடுகளம் பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் இங்கிலாந்தில் வானிலை முறையாக கணிக்க முடியாத சூழல் இருப்பதே காரணம் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் இந்த மைதானத்தில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியம். அதே போல ஆடுகளம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி 2 நாட்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், அங்கிருந்து வரும் உறுதியான கள தகவல் என்னவென்றால் களத்தில் பந்து பவுன்ஸ் ஆவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இருக்கும் பவுன்ஸ் சூழல் ஓவலில் இருக்க வாய்ப்புகள் உள்ளது. இதை இந்திய அணி வீரர்கள் ஓவலில் தங்களது முதல் வலை பயிற்சி மேற்கொண்ட போதே எதிர்கொண்டனர்.

ஓவலில் ஆஸ்திரேலியா: இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலிய அணி மிகவும் மோசமாக செயல்பாடு வைத்துள்ள ஒரே மைதானமாக ‘தி ஓவல்’ உள்ளது. 38 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஓவல் மைதானத்தில் 44 ரன்களுக்கு (இங்கிலாந்து அணிக்கு எதிராக 1896) ஆஸ்திரேலியா ஆல் அவுட்டாகி உள்ளது. அதே போல இந்த மைதானத்தில் ஒரே இன்னிங்ஸில் 903 ரன்களை (இங்கிலாந்து அணிக்கு எதிராக 1938) ஆஸி. விட்டுக் கொடுத்துள்ளது. கடைசியாக கடந்த 2019-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் விளையாடிய போது ஆட்டத்தை இழந்துள்ளது ஆஸி.

ஓவலில் இந்தியா? - இந்திய அணி கடந்த 1936 முதல் ஓவல் மைதானத்தில் விளையாடி வருகிறது. இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றி, 5 தோல்வி மற்றும் 7 போட்டிகள் சமனில் முடித்துள்ளது. கடந்த 2021-ல் இங்கிலாந்து அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது.

மழை வருமா? - இந்தப் போட்டியின் முதல் மூன்று நாட்கள் அதாவது ஜூன் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஓவலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நான்கு மற்றும் ஐந்தாவது நாள் மதியம் மற்றும் மாலை நேரத்தில் மழை பொழிவு இருக்கலாம் எனவும் தெரிகிறது. இந்தப் போட்டியில் முடிவை எட்டும் வகையில் மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டால் ஆறாவது நாள் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ஓவலில் பெரும்பாலும் ஐந்தாம் நாளுக்கு முன்பே ஆட்டத்தில் முடிவு எட்டப்படும் என சொல்லப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x