

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக லண்டன் நகருக்கு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வந்துள்ளனர். நேற்று ஆஸ்திரேலிய அணிவீரர்கள் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது டேவிட் வார்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் எனது குடும்பத்தாருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். நீண்ட காலம் அவர்களைப் பிரிந்து அணிக்காக விளையாடி வருகிறேன். தற்போது எங்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி சவாலாக அமைந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரன் குவித்தால் தொடர்ந்து விளையாடுவேன். இல்லாவிட்டால் பாகிஸ்தான் தொடருக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டேன்.
நான் அனைத்துப் போட்டிகளையும் எனது இறுதிப் போட்டியாக நினைத்துதான் விளையாடுகிறேன். அதுதான் என்னுடைய ஸ்டைலாக அமைந்துள்ளது. தொடர்ந்து அணி வீரர்களுடன் இணைந்து இருப்பது பிடித்திருக்கிறது.
நான் டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமென்று நினைக்கிறேன். அதுதான் என் மனதில் திட்டமாக அமைந்துள்ளது. அதற்கு முன்பு நிறைய கிரிக்கெட் தொடர்களில் விளையாட வேண்டியுள்ளது. பிப்ரவரியுடன் டெஸ்ட் தொடர்கள் முடிந்தாலும் ஐபிஎல் மற்றும் பல கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தான் தொடருக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவார்னர் முடிவெடுத்துள்ளதைத்தான் சூசகமாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.