Published : 03 Jun 2023 06:15 AM
Last Updated : 03 Jun 2023 06:15 AM

பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எப்ஐஆரில் கூறப்பட்டுள்ள தகவல்கள் என்ன?

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண்சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 21-ம் தேதி வீராங்கனைகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த நிலையில் அதன் மீது ஒரு வாரத்துக்கு பின்னர் 28-ம் தேதி டெல்லி போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

முதல் தகவல் அறிக்கையில் 6 மல்யுத்த வீராங்கனைகள் வைத்த குற்றச்சாட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டாவது எப்ஐஆர் மைனர் மல்யுத்த வீராங்கனை ஒருவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைனர் பெண் என்பதால் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்து இருக்கும் குற்றச்சாட்டுக்கள் 2012 முதல் 2022-ம் ஆண்டு வரை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று இருக்கின்றன.

பிரிஜ் பூஷன் சரண் சிங், வீராங்கனைகளிடம் தனிப்பட்ட முறையில் முறைகேடான கேள்விகளைக் கேட்டதாகவும், விளையாட்டில் முன்னேற்றம் காணவும், தேவையான உதவிகளை பெறவும் பாலியல் அத்துமீறலுக்கு உடன்பட வேண்டும் என கோரியதாகவும், அதை நிராகரித்தவர்களுக்கு பிரச்சினைகளை உருவாக்கி, விளையாட்டின் தொழில் வாய்ப்புகளை மறுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வீராங்கனைகளில் ஒருவர் அளித்த புகாரில், பிரிஜ் பூஷண் சரண்சிங் என்னை அழைத்து என் மீது கையை வைத்தார். எனது ஊட்டச்சத்து நிபுணர் அனுமதிக்காத அறியப்படாத உணவை எனக்கு பிரிஜ் பூஷண் சரண்சிங் வழங்கினார். அதை சாப்பிட்டால் உடலுக்கும், விளையாட்டில் சிறந்த திறனை வெளிப்படுத்தவும் உதவும் எனக்கூறியதாக தெரிவித்துள்ளார்.

மற்றொரு வீராங்கனை தனது புகாரில், வெளிநாட்டில் நடைபெற்ற போட்டியின் போது நான் காயம் அடைந்தேன். அப்போது பிரிஜ் பூஷண் சரண்சிங் தன்னிடம் வந்து, பாலியல் சீண்டல்களுக்கு அடிபணிந்தால் மல்யுத்த சங்கம் உனது சிகிச்சைக்கு செலவு செய்யும் எனக் கூறியதாக தெரிவித்துள்ளார்.

விருது வென்ற மற்றொரு வீராங்கனை தனது புகாரில், பயிற்சிக்கான மேட்டில் நான் திடீரென விழுந்தபோது பிரிஜ் பூஷண் சரண்சிங் எனது அருகே வந்து நின்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனது பயிற்சியாளர் அங்கு இல்லாத நிலையில் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என தெரிவித்துள்ளார்.

புகார் கூறிய அனைத்து வீராங்கனைகளும் தகாத முறையில் தொடுதல் மற்றும் துன்புறுத்தலின் வடிவத்தை விவரித்துள்ளனர். ஒரு நாள் நான் ஓட்டலில் இரவு உணவு அருந்த சென்றிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் (பிரிஜ் பூஷண் சரண்சிங்) என்னைத் தனியாக அவரது சாப்பாட்டு மேசைக்கு அழைத்து தவறாக நடந்து கொண்டார் என தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

புகார் அளித்த மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவர், பாலியல்சீண்டலுக்கு சலுகையாக கூடுதல் ஊட்டச்சத்து பொருட்களை வாங்கித் தருவதாகக் பிரிஜ் பூஷண் சரண்சிங் கூறியதாக குற்றம் சாட்டியுள்ளார். பிரிஜ் பூஷண் சரண்சிங் தனது பெற்றோருடன் தொலைபேசியில் தன்னை பேச வைத்தபோது வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்தார். பின்னர் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்தார். ஆனால் நான் அழ ஆரம்பித்ததால் எனது அதிருப்தியை தெரிந்துகொண்டு தனது தவறான நோக்கங்களை மறைப்பதற்காக நான் உன் தந்தை போன்றவர்தான் எனக் கூறி விட்டுவிட்டார் எனக் கூறியுள்ளார்.

மற்றொரு புகாரில், பிரிஜ் பூஷண் சரண்சிங் எனது தாயின் செல்போன் எண்ணை பதிவு செய்து வைத்துக்கொண்டு அடிக்கடி என்னிடம் பேசத் தொடங்கினார். அப்போது தகாத கேள்விகளை கேட்பார். இது எனக்கும் எனது தாய்க்கும் சங்கடமாக இருந்தது. ஒரு கட்டத்தில் செல்போன் எண்ணையே மாற்றிவிட்டோம் என்று கூறியுள்ளார்.

மற்றொரு மல்யுத்த வீராங்கனை, அணியுடன் புகைப்படம்எடுத்த போது நான் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது எனது பின் பகுதியில் யாரோகை வைப்பது போன்று உணர்ந்தேன். அங்கிருந்துநகர்ந்து செல்ல முயன்ற போது பிரிஜ் பூஷண்சரண்சிங் என் தோளை பிடித்து இழுத்தார் என புகாரில் தெரிவித்துள்ளார். மற்றொரு வீராங்கனை மல்யுத்த சங்கத்தின் செயலாளர் வினோத் தோமர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளார்.

2 முதல் தகவல் அறிக்கைகளும் (எப்ஐஆர்) இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 354 (ஒரு பெண்ணின் அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில்தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியைஉபயோகப்படுத்துதல், 354ஏ (பாலியல் துன்புறுத்தல், 354டி (பின்தொடர்தல்), 34 (பொது நோக்கம்) ஆகியவற்றை மேற்கோள் காட்டுகின்றன. இந்த வகை சட்டப் பிரிவுகளின் கீழ் ஓராண்டு முதல்3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கவாய்ப்புள்ளது.

அதேவேளையில் மைனர் வீராங்கனையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவில் குற்றம்நிரூபிக்கப்பட்டால் ஐந்து முதல் ஏழுஆண்டுகள் வரை சிறை தண்ட னையை சந்திக்க நேரிடும்.

‘வேதனை அளிக்கிறது’: இந்த நிலையில், மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதத்தால் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் எங்களை மிகுந்த மனவருத்தத்துக்கு ஆளாக்கியுள்ளது. அவர்கள் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்படும் விதம் வேதனையளிக்கிறது. மல்யுத்த வீரர்கள் தங்களது கடின உழைப்பால் வென்ற பதக்கங்களை கங்கையில் வீச முடிவெடுத்தது குறித்தும் கவலை அடைந்தோம். அந்தப் பதக்கங்களை அவர்களது பல ஆண்டு உழைப்பு, உறுதி மற்றும் தியாகம் அவர்களுக்கு பெற்றுத் தந்துள்ளது. அந்த பதக்கங்கள் அவர்களுடையது மட்டுமல்ல, அவை நாட்டின் பெருமை மற்றும் மகிழ்ச்சி. இந்த விவகாரத்தில் மல்யுத்த வீரர்கள் அவசரப்பட்டு பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் என வலியுறுத்துகிறோம். சட்டப்படி அனைத்து விஷயங்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது” எனக் கூறப்பட்டு உள்ளது.

பிரிஜ் பூஷண் சிங்கின் பேரணிக்கு அனுமதி மறுப்பு: பாஜக எம்.பி.யும், தேசிய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மகா பேரணிக்கு, அயோத்தி போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பிரிஜ் பூஷண், வரும் 5-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஜன் சேத்னா பேரணி என்ற பெயரில் மிகப்பெரிய அளவிலான விழிப்புணர்வுப் பேரணியை நடத்துவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி பேரணியை நடத்துவதற்கு அயோத்தி மாவட்ட நிர்வாகம் அனுமதியை மறுத்துவிட்டது. அதே தினத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நகரில் நடைபெறுவதால், பிரிஜ் பூஷணின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அயோத்தி மாவட்ட எஸ்.பி. கவுதம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x