

லண்டன்: எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வகையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இங்கிலாந்து சென்றுள்ளார். தற்போது அவர் இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில் ‘வானத்தைப்போல’ தமிழ் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடலை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக அவர் வைத்துள்ளார்.
இந்திய அணியின் பயிற்சி உடையில் அவர் நிற்கும் படத்தையும் இதில் வைத்துள்ளார். அதோடு மஞ்சள் நிறத்தில் 5 ஹார்ட்டீனையும் அவர் வைத்துள்ளார். இதன் மூலம் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குறிப்பிடுகிறார் என சொல்வது போல உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஜடேஜா, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அண்மையில் முடிந்த 2023 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வெல்ல கடைசி 2 பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி அசத்தி இருந்தார் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கேப்டன் தோனிக்கும், ஜடேஜாவுக்கும் இடையே கருத்து முரண் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அதையெல்லாம் தகர்க்கும் வகையில் அணியை வெற்றி பெற செய்த கையுடன் நேரடியாக தோனி இருக்கும் இடம் நோக்கி ஓடிச் சென்று, அவரை அணைத்தார் ஜடேஜா.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜடேஜா பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவின் பின்னணியில் பாடல் ஒன்று ஒலித்தது. அது தெலுங்கு பட பாடல் என்றாலும் தமிழில் ஒலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.