இம்பேக்ட் பிளேயர், டிஆர்எஸ் முறை: புதுப்பொலிவுடன் டிஎன்பிஎல் தொடர்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 7-வது சீசன் போட்டிகள் வரும் 12-ம் தேதி தொடங்கி ஜூலை 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும், சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்துகொள்கின்றன.

மொத்தம் 32 போட்டிகள் 25 நாட்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களும் கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடத்தப்படவுள்ளது. குவாலிஃபையர் 1, எலிமினேட்டர் ஆட்டம் சேலம் மைதானத்திலும் குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப்போட்டி திருநெல்வேலியிலும் நடைபெறுகிறது. பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் மழையால் தடைபட்டால் மாற்று நாளில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்பட்ட இம்பேக்ட் பிளேயர் விதி டிஎன்பிஎல் தொடரிலும் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் சர்வதேச போட்டிகளில் உள்ள ’டிஆர்எஸ்‘ முறையும் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் வைடு, நோ-பால்களை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது எனவும் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த ஆண்டு மகளிருக்கான டிஎன்பிஎல் தொடரை நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். டிஎன்பிஎல் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.70 கோடி ஆகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.30 லட்சத்தை பெறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in