

திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 30-ம்தேதி முதல் ஜனவரி மாதம் 10-ம்தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தரிசன டோக்கன்கள் இல்லாவிட்டாலும் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்யலாம் என நேற்று அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தெரிவித்துள்ளார்.
திருமலையில் உள்ள பக்தர்களின் தங்கும் விடுதியை(பிஏசி-2) நேற்று காலை தேவஸ்தான அறங்காவலர் பிஆர் நாயுடு ஆய்வு செய்தார். மேலும் அவர் முடி காணிக்கை செலுத்துமிடம், லாக்கர்கள் வழங்குமிடம், அன்னபிரசாத மையம் போன்றவற்றையும் ஆய்வு செய்து, நிறை, குறைகளை பக்தர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல், ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை திருமலையில் பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கண்ட 10 நாட்களுக்கு பாதுகாப்பு, அன்னதானம், தரிசனம் போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
முதல் 3 நாட்கள், அதாவது 30, 31 மற்றும் ஜனவரி 1ம் தேதி வரை குலுக்கல் முறையில் பக்தர்கள் தரிசன டோக்கன்களை பெற்றனர். ஜனவரி 2-ம் தேதி முதல் எவ்வித டோக்கன்கள் இல்லாவிட்டாலும், சாமானிய பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த கால அனுபவங்கள் மூலம் இம்முறை மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்ய தேவஸ்தானம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.