

திருமலை: கோடை காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் வரும் மே 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதி வரை தொடர்ந்து 2 மாதங்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் மற்றும் ஸ்லாட்டட் சர்வ தரிசனம் (எஸ்எஸ்டி) அதாவது சர்வ தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன் வழங்குதலை நிறுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதனால் முன்கூட்டியே சர்வ தரிசன டோக்கன்கள் வழங்காமல், நேரடியாக சர்வ தரிசன முறையை அமல்படுத்த உள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளில் கோடை விடுமுறையில் அமல்படுத்திய முறைகளை தேவஸ்தானம் ஆய்வு செய்து வருகிறது.
அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் கோடை விடுறையில், அதாவது மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மட்டும் சராசரியாக 23- 24 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர்.
தற்போது விஐபி பிரேக் தரிசனத்திற்காக தினமும் 2 முதல் 3 மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் 3,800 பக்தர்கள் சுவாமியை தரிசிக்கின்றனர். இதை ரத்து செய்வதன் மூலம் 15 ஆயிரம் பக்தர்கள் தர்ம தரிசனம் மூலம் சுவாமியை தரிசனம் செய்யலாம். இதனால் கோடையில் விஐபி பிரேக் தரிசனத்தை ரத்து செய்வது பற்றி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.